சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. இதையடுத்து முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு மற்றும் முதல் பருவத் தேர்வு கடந்த செப்.10-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று (அக்.6) திறக்கப்படுகின்றன. தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் வளாகங்களில் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நாளிலேயே 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை விநியோகிக்க வேண்டும் என்றும், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பருவமழை முன்னேற்பாடுகள்: வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்புக்காக தலைமை ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேங்கும் பகுதிகள், திறந்த சாக்கடைக் கிணறுகள், கழிவுநீர் குழாய்கள் மற்றும் நீர்தேங்கும் சாக்கடை மூடப்பட்டு இருப்பதை உறுதிசெய்து, மாணவர்கள் அப்பகுதிகளில் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல, பள்ளியின் சுற்றுச்சுவர் உறுதித்தன்மை, மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்று கண்காணித்து சரிசெய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.