சென்னை: திமுகவின் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ எனும் பிரச்சார வாசகத்தை விமர்சித்து எந்த சண்டையும் இல்லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் 2 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ‘திருவருட்பா-ஆறாம் திருமுறை’ எனும் நூலின் இந்திப்பதிப்பை வெளியிட்டார். தொடர்ந்து மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வள்ளலார் சன்மார்க்க கண்காட்சியையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: இன்றைய உலகில் இருக்கும் பிரிவினைவாதம், வறுமை ஆகியவற்றை போக்கும் வழிகள் வள்ளலாரின் தத்துவங்களுக்கு உள்ளன. வள்ளலாருக்கு தரவேண்டிய மரியாதை இன்னும் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. அதனால்தான் 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வள்ளலார் விழாவை நடத்தி வருகிறேன். வள்ளலாரை தினமும் வணங்க வேண்டும் என்பதற்காகவே வள்ளலார் சிலையை ராஜ்பவனில் அமைத்தேன்.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமின்றி மரங்களைவெட்டுவதாலும், காடுகளை அழிப்பதாலும் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் மக்கள் மழையாலும், மறுபுறம் வெப்ப அலையாலும் பாதிக்கப்பட்டனர். இது இயற்கையின் கோபம். பேராசையோடு இருந்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை மாற்ற நாம் சன்மார்க்க பாதையில் பயணிக்க வேண்டும்.
அதேபோல், வன்முறை நிகழ்வுகள் செய்திகளாக வருகின்றன. பட்டியலின சமுதாயத்துக்கான உரிமை மிகவும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பெரும்பான்மையாக உயர்கல்வி படித்த தமிழகத்தில் எப்படி மக்கள் இவ்வாறு வழிநடத்தப்படுகிறார்கள் என்று சிந்திக்க தோன்றுகிறது. படிப்பறிவு மட்டுமே பாகுபாட்டை மாற்றாது. இந்த உயர், தாழ்வை சரிசெய்ய ஒரே வழி சமுதாய சீர்திருத்தம் தான்.
மறுபுறம் அரசியல் கட்சிகள் பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சிகளில் தொடந்து ஈடுபடுகின்றன. இதை அழிக்கக்கூடிய வழிகளை அடுத்து வரும் சந்ததிக்கு கடத்த வேண்டும். அதற்கு ஒரே வழி வள்ளலார் அறிவுரைகள் மக்களை சென்றுசேர வேண்டும். வள்ளலாரின் சன்மார்க்கம் எல்லாரையும் சென்றடைய வேண்டும். பல்கலைக்கழகங்களில் வள்ளலார் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கைகளை உருவாக்க வேண்டும்.
நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும்போது ‘தமிழ்நாடு போராடும்’ என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழகம் யாருடன் போராடும், தமிழகத்தை எதிர்த்து யாரும் போராடவில்லையே. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். நம்முள் சண்டைகள் இல்லை, பிரச்சினை இல்லை. நாம் நிச்சயமாக ஒன்றிணைந்துவாழ வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.