மறைமலை நகர்: திராவிடத்துக்கு எதிராக பாஜகவும் திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிச்சாமியின் அதிமுகவும், மீண்டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நேற்று நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த இம்மாநாட்டில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது:
பெரியார் பெயரில் பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் ஆய்வு மையத்துக்கு என்னுடைய சம்பளம் மற்றும் திமுகவின் 126 எம்எல்ஏக்கள், 31 எம்.பி.க்களின் ஒரு மாதம் சம்பளமாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம். இதில், பெண்களையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம். காலனி என்ற சொல்லை அகற்றி இருக்கிறோம். சாதிப் பெயரால் இருக்கும் விடுதியை சமூகநீதி விடுதியாக மாற்றி இருக்கிறோம். சாதியில் இறுதி எழுத்து ‘ர்’ முடியும் வகையில் மாற்றக் கோரி பிரதமருக்கு மனு அளித்திருக்கிறோம். வேற்றுமையற்ற சமுதாயத்தை உருவாக்க திராவிட மாடல் அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழா கொண்டாடும் நிலையில், இங்கு எதுவும் மாறவில்லை என சிலர் சொல்கிறார்கள். அவர்களின் கேள்விகளில் இருப்பது அக்கறை அல்ல ஆணவம். ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கிய கட்டமைப்பை நூறு ஆண்டுகளில் நாம் மாற்றுவதற்கான விதை மட்டும் விதைத்திருக்கிறோம். இங்கு எதுவும் மாறக்கூடாது என்று நினைக்கிறவர்கள், எல்லாரும் சேர்ந்து சதி திட்டம் போடுகிறார்கள். என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறுகளை பரப்புகின்றனர். நான் எப்பொழுதும் என் செயல்களால் பதிலடி கொடுத்து வருகிறேன்.
கடைசித் தமிழர்களின் மூச்சிருக்கும் வரை சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை எப்பேர்பட்ட எதிரி வந்தாலும் தமிழர் இனத்தை அழிக்க முடியாது. சிலருக்கு சமூக நீதி பிடிக்காது, இடஒதுக்கீடு பிடிக்காது, சமத்துவம் பிடிக்காது, ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது, தமிழ் பிடிக்காது, தமிழர்கள் பிடிக்காது, நாம் தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது. சுயமரியாதை இயக்கம் பெற்றுக் தந்தவற்றை பறிக்க ஒரு கூட்டம் நினைக்கிறது. அவர்களின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்துவது தான் திராவிட மாடல்.
வரப்போவது அரசியல் தேர்தல் அல்ல, தமிழினம் தன்னை காத்துக் கொள்ளக்கூடிய சமுதாயத் தேர்தல். கொள்கையற்ற அதிமுகவினரால் பத்தாண்டு பாழாய் போன தமிழகத்தை மீட்டெடுத்து நான்கு ஆண்டில் பலப்படுத்தி இருக்கிறோம். திராவிடத்துக்கு எதிராக பாஜகவும் திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிச்சாமியின் அதிமுகவும் மீண்டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைக்கின்றன.
தமிழகத்தை நாசப்படுத்தும் கூட்டத்தை வேரோடும், வேரோடும் மண்ணோடும் வீழ்த்த வேண்டும். அதற்கு கொள்கை தெளிவும் போராட்டமும் செயல்திட்டமும் ஒற்றுமை உணர்வும் வேண்டும். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என அனைவரும் உறுதி எடுப்போம். வென்று காட்டுவோம். தமிழ்நாடு போராடும், வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஏ.வ. வேலு, எம்.பி.கள் டி.ஆர். பாலு, செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.