நாளுக்கு நாள் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி குறித்த டாக் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்த செயலியை வடிவமைத்து வெளியிட்டுள்ளது இந்திய நிறுவனமான சோஹோ தான். அதனால் இந்த செயலி குறித்த ஆர்வம் பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த செயலியின் டவுன்லோடு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
சாமானியர்கள் தொடங்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வரை இந்த செயலி குறித்த பேச்சுதான். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? அரட்டை மற்றும் வாட்ஸ்-அப் செயலுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சோஹோ நிறுவனம்: கடந்த 1996-ல் தொடங்கப்பட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம்தான் சோஹோ கார்ப்பரேஷன். அமெரிக்காவில் இதன் செயல்பாடு தொடங்கியது. தொடக்கத்தில் நெட்வொர்க் மேனேஜ்மேன்ட் சார்ந்த மென்பொருளை இந்த நிறுவனம் வழங்கியது. படிப்படியாக இதன் செயல்பாடு உலக அளவில் விரிவடைந்தது.
சாப்ட்வேர் டெவலப்மென்ட், சோஷியல் நெட்வொர்க்கிங் சர்வீஸ், கிளவுட் கம்யூட்டிங் உள்ளிட்ட சேவைகளை சோஹோ வழங்கி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு தரவுகளின் படி சுமார் 80 மில்லியன் பேர் இந்த நிறுவனத்தின் சேவைகளை பெற்று வருவதாக தகவல்.
அரட்டை செயலி: கடந்த 2021-ல் அரட்டை செயலியை சோஹோ நிறுவனம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த செயலி செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், அண்மைய நாட்களாக இந்த செயலியை அதிகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் டவுன்லோடு செய்து வருகின்றனர். அதன் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆயிரத்தில் இருந்து லட்சமாக இதன் தினசரி டவுன்லோடு எண்ணிக்கை கூடியுள்ளது.
வழக்கமாக ஒரு மெசேஜிங் செயலியில் பயனருக்கு என்னென்ன தேவையோ அத்தனை அம்சங்களையும் கச்சிதமாக இந்த அரட்டை செயலி கொண்டுள்ளது. வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், லொகேஷன் ஷேரிங், படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர, ஸ்டோரீஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.
அரட்டை செயலியை பயன்படுத்துவது எப்படி? – வாட்ஸ்-அப் செயலி போலவே அரட்டை செயலியை பயன்படுத்தவும் பயனர்கள் தங்கள் மொபைல் எண் துணையோடு பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் ‘அரட்டை’ செயலியில் பதிவு செய்த மற்ற பயனர்களுடன் சாட் செய்யலாம்.
ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணமின்றி டவுன்லோடு செய்து, தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். மேலும், பயனர் ஒருவர் தனது அரட்டை கணக்கை ஐந்து சாதனங்களுடன் லிங்க் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி ஆண்ட்ராய்டு டிவி சப்போர்ட்டை கொண்டுள்ளது. இது மற்ற மெசேஜிங் செயலிகளில் இல்லாத ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது.
அரட்டை செயலியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
> பயனர்களுக்கு பிரத்யேகமாக ‘பாக்கெட்’ எனும் கிளவுட் ஸ்டோரேஜ் அம்சத்தை அரட்டை செயலி வழங்குகிறது. பொதுவாக வாட்ஸ்-அப் செயலியில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய முக்கிய மெசேஜ்களை Save செய்து கொள்ள தங்களது எண்ணுக்கே சுயமாக மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால், அரட்டையில் உள்ள ‘பாக்கெட்’ ஸ்டோரேஜ் அம்சம் இதற்கு மாற்றாக அமைந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது தேவையான மெசேஜ்கள், மீடியாக்கள் மற்றும் நோட்ஸ்களை Save செய்து கொள்ளலாம்.
> பல்வேறு தளங்களில் இப்போது ஏஐ சாட்பாட் இருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் பயனரின் தேவைக்கு மேலாக ஏஐ சாட்பாட் அம்சம் திணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது. இந்தச் சூழலில் இப்போதைக்கு ஏஐ செயல்பாட்டை பயனர்கள் மீது அரட்டை திணிக்காமல் உள்ளது.
> முக்கியமாக இதில் உள்ள மீட்டிங்ஸ் ஆப்ஷன். இதன் மூலம் பயனர்கள் நேரடியாக அரட்டை செயலியில் இருந்தபடி நேரடியாக மீட்டிங்ஸை கிரியேட் செய்யவும், சக பயனர்கள் உருவாக்கிய மீட்டிங்ஸில் இணையவும், அதை திட்டமிடவும் முடியும்.
> இதில் மென்ஷன்ஸ் டேப் அம்சமும் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் முக்கிய மெசேஜ்களை மிஸ் செய்யாமல் பார்க்க முடியும்.
> வாடிக்கையாளர்களின் தகவல்களை மூன்றாவது நபருக்கு கண்டிப்பாக விற்க மாட்டோம் என சோஹோ தெரிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்களின் தரவுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள டேட்டா சென்டர்களில் சேமிக்கப்படும் என்றும் சோஹோ கூறியுள்ளது. இதன் மூலம் Ad-Free பயனர் அனுபவம் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
> அரட்டை மெசேஞ்சரில் குரூப் சாட் அம்சம் உள்ளது. அதிகபட்சமாக ஆயிரம் பயனர்கள் வரை ஒரு குழுவில் இணையலாம்.
அரட்டைக்கு முன் உள்ள சவால்? – ஏற்கெனவே வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜிங் செயலிகள் சந்தையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. இந்நிலையில், அரட்டை செயலி இந்த சவாலை கடந்து பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கினால் மற்ற செயலிகளை போலவே ‘மேட்-இன்-இந்தியா’ செயலியான அரட்டையும் ஆதிக்கம் செலுத்தலாம். எந்தவொரு செயலியாக இருந்தாலும் பயனர்களுக்கு தேவையான அம்சங்களை லேட்டஸ்ட் அப்டேட் உடன் இருக்க வேண்டியது அவசியம்.