ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 அணித் தேர்வில் ஹர்ஷித் ராணா தேர்வு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கம்பீருக்கு ஆமாஞ்சாமி போடுபவர்களாக இருந்தால் அணியில் தேர்வு என்று ஸ்ரீகாந்த் கடும் காட்டமாக விமர்சன மட்டையைச் சுழற்றியுள்ளார்.
அதே போல் ஒருநாள் அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததையும் கடுமையாக விமர்சித்தார் ஸ்ரீகாந்த். வீரர்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கி வருகிறார்கள், மாற்றி மாற்றி எடுப்பதும் கவிழ்ப்பதுமாக அணியைத் தேர்வு செய்து வருகின்றனர். நன்றாக ஆடுபவர்களுக்கு வாய்ப்பில்லை, ஆடாதவர்களுக்கு வாய்ப்பு இப்படியெல்லாம் செய்யலாமா என்று ஸ்ரீகாந்த் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவம்பர் 2024-ல் அடுத்தடுத்து மூன்று வடிவங்களிலும் ஹர்ஷித் ராணா அறிமுகமானார். சமீப ஆசியக் கோப்பை வெற்றி அணியில் இருந்தார் ராணா. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரில் 4 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தன் யூடியூப் சேனனில் ஸ்ரீகாந்த் கூறும்போது, “இப்படி அணித்தேர்வைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் வீரர்களைக் குழப்பி விடுகின்றனர். நமக்கே இவர்கள் என்ன அணியைத் தேர்வு செய்வார்களோ என்ற ஐயம் தினமும் ஏற்படுகிறது. திடீரென யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கிறார். அடுத்த நிமிடம் இல்லை. ஒரேயொரு நிரந்தர வீரர் இருக்கிறார் அவர்தான் ஹர்ஷித் ராணா. அவர் ஏன் இந்த அணியில் இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.
ஒவ்வொரு முறையும் வீரர்களை எடுப்பதும் கழற்றிவிடுவதும் ஆன செயலில் அவர்களின் தன்னம்பிக்கையை காலி செய்கின்றனர். சில வீரர்கள் நன்றாக ஆடினாலும் அவர்களை எடுப்பதில்லை. ஆனால் மற்றவர்கள் நன்றாக ஆடாவிட்டாலும் அணியில் இருக்கின்றனர். சிறந்தது என்னவெனில் ஹர்ஷித் ராணா போல் இருக்க வேண்டும்.
அணியில் தேர்வாக வேண்டுமென்றால் கம்பீருக்கு ஆமாம் சாமி போட வேண்டும் போல் இருக்கிறது. 2027 உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்ய வேண்டும். ஆனால், இவர்கள் அணித்தேர்வைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. உத்தேச அணியில் ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டியைத் தேர்வு செய்தால் உலகக்கோப்பைக்கு டாடா காட்டி விட வேண்டியதுதான்.
ஹர்ஷித் ராணா சினிமா போல் சில வேலைகளைச் செய்கிறார். இதெல்லாம் நீங்கள் சரியாக பவுலிங் வீசவில்லையெனில் ஒரு பயனையும் தராது. ஐபிஎல் தொடரிலும் அவர் சினிமாத்தனமான சேஷ்டைகளைச் செய்தார். இது சரியான மனநிலை அல்ல. அது வெறுமனே தன்னை ஷோவாகக் காட்டிக் கொள்ளுதலே. பீல்டிங்கில் பந்து அவரைத் தாண்டி போன பிறகு டைவ் அடிக்கிறார். கோல் அடித்த பிறகு நீ டைவ் அடித்த பிறகு என்ன பயன்? ஆக்ரோஷம் வேறு ஆனால் சீன் போடுவது வேறு” என்று ஸ்ரீகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.