மதுரை: 18 எம்எல்ஏக்களை அரசியல் அநாதையாக்கியவர் டிடிவி தினகரன் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் சமயநல்லூரில் நடந்தது. இதில் பங்கேற்ற சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது; தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் திமுகவின் துரோகங்களை சக்கர வடிவில் அச்சடிக்கப்பட்டு திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.
எப்போது ஒருவர் திமுகவையும், ஸ்டாலினையும் பாராட்டி புகழ்ந்து பேசுகிறாரோ, அப்போதே அவர் அதிமுக பற்றி பேச தகுதியை இழந்து விடுகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மையாக பார்க்கப்படுகிறது.
இதுதான் தொண்டர்கள் மக்களின் தீர்ப்பாகும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் தமிழகத்தில் முதல்வராக வரவேண்டும் என தொண்டர்களின் நம்பிக்கை இழந்து ,மக்களின் நம்பிக்கை இழந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தனிநபர் கருத்தை யாரும் பொருட்படுத்த அவசியமில்லை.
அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், திமுகவின் உண்மை முகத்தை, குடும்ப வாரிசை, மன்னராட்சியை அழித்து மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்யும் வகையில் இன்றைக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி இயக்கத்தை மீட்டு தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார்.
இன்றைக்கு அந்த லட்சியத்தை விலக்கி பொது நலன், மக்கள் நலம், தொண்டர் நலன் மறந்து , சுயநலத்தின் மொத்த உருவமாக தஞ்சையில் கருத்து கந்தசாமியாக (தினகரன்) கருத்து சொல்லி உள்ளார். தமிழகத்தில் யார் முதல்வராக வரவேண்டும், வரக்கூடாது என, தமிழக மக்கள் தான் தீர்ப்பு சொல்லவேண்டும்.
மக்கள், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட தனிநபர் விருப்பம் மக்களிடம் பிரதிபலிக்காது. இதுதான் கடந்த கால வரலாறு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்ணை மூடிக்கொண்டு பேசும் கருத்து கந்தசாமிக்கு சில வரலாறை நான் கூற கடமைப்பட்டுள்ளேன்.
2026 சட்டமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் வெற்றிவாகை சூடி மீண்டும் அதிமுக ஆட்சியை நிச்சயம் மலரச் செய்வார் .அதற்கு உங்களுக்கு எந்த சந்தேகமும், உங்களுக்கு கவலையும் வேண்டாம்.எங்களின் எதிர்கால அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்க தேவையில்லை. இன்றைக்கு உங்களை புரிந்து கொண்டவர்கள் விலகிச் சென்றார்கள், புரிந்து கொண்டவர்கள் தற்போது விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள், புரியாதவர்கள் புரிந்து இனிமேல் காலம் தாழ்த்தாமல் அவரை விட்டு விலகிச் செல்லவேண்டும். அவரை நம்பிவர்களெல்லாம் திமுகவுக்கு வழி அனுப்பி வைத்தார்.
முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்கத்தமிழ் செல்வன் என்று பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. மேலும் அவர் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட மகேந்திரன், உமாதேவன் உள்ளிட்ட பல பேர் இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையை ஏற்றுள்ளனர். உங்களை நம்பி 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்து போட்டார்கள். அவர்களை அரசியல் அநாதையாக்கிவிட்டீர்கள். உங்களது தளபதியாக இருந்தவர்கள் இன்றைக்கு ஸ்டாலினுக்கு தளபதியாக மாறிவிட்டனர்.இதற்கு பதிலை சொல்லுங்கள்? அம்மாவின் கொடியை வைத்துக் கொண்டு திமுகவை பாராட்டுவது பச்சை துரோகம். இவ்வாறு அவர் பேசினார்.