புதுச்சேரி: திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய நாளை முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக திமுக அறிவித்துள்ளது.
புதுவை மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா இன்று கூறியிருப்பதாவது: பாஜக கூட்டணி அரசிடமிருந்தும் புதுவை மாநிலத்தை மீட்டு, மண்–மொழி–மானம் காக்க, திமுக சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரையை முன்னெடுக்க திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
புதுச்சேரி, மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பாஜக கூட்டணி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளர், ஜெகத்ரட்சகன், எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில திமுக சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரை முன்னெடுக்கும் முதல்கட்ட உறுப்பினர் சேர்க்கும் பணி நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன், எம்.பி. தலைமையேற்று, புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்துகிறார். தொடர்ந்து முத்தியால்பேட்டை தொகுதியில் “உடன்பிறப்பே வா” எனும் பரப்புரையை தொடங்கி, வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியை முன்னெடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, உப்பளம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய 5 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி வைக்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆணையின்படி, 2026-ல் மீண்டும் புதுச்சேரியில் 5-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய இந்த உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.