ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது தொடர்பாக அவர்களது மகள் இந்திரஜா விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் முன்னணி நடிகரான ரோபோ சங்கர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடி வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, பேசுபொருளானது.
இது தொடர்பாக ரோபோ சங்கர் குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதனிடையே, ரோபோ சங்கர் மறைந்து 16-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவருடைய உருவப்படத்தினை திறந்து வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ரோபோ சங்கர் குடும்பத்தினர்.
அப்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, “அப்பா சாமியிடம் சென்றபோது வழியனுப்ப உறுதுணையாக இருந்த காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருடைய கைதட்டல்களில் தான் அப்பா உருவானார். எங்கெல்லாம் கைதட்டல்கள் இப்போது இருக்கிறதோ, அங்கெல்லாம் அப்பா இருப்பார். அப்பா விட்டுவிட்டுச் சென்ற பொறுப்புகள் நிறைய இருக்கிறது. கண்டிப்பாக அதனை முடிப்போம்” என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து ரோபோ சங்கர் மனைவி நடனமாடியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்திரஜா, “அப்பா – அம்மா இருவருடைய காதல் பேச்சு, வெளியே செல்வதில் எல்லாம் இல்லை. அவர்களுடைய நடனத்தில் தான் காதல் இருக்கும். அப்பா சாமியிடம் செல்லும் போது அவருடைய காதலின் வெளிப்பாடே அந்த நடனம் என்று தான் பார்க்கிறேன். அப்பா – அம்மா மாதிரி அன்னியோன்னியமாக யாராலும் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அம்மாவின் நடனத்தை விமர்சிப்பவர்களின் புரிதல் அவ்வளவு தான். அதை எதிர்த்துப் பேசி இன்னும் பெரிதாக ஆக்க விரும்பவில்லை” என்று பதிலளித்துள்ளார்.