டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாயினர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இப்போது, மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இமயமலையை ஒட்டி உள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதில், டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவானது டார்ஜிலிங்கின் மிரிக் – சுகியாபோக்ரி சாலையில் உள்ள மலைப்பாதைகளில் நிகழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், வீடுகள், சாலைகள் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. தொலைத் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் பற்றிய மேலதிக துல்லிய விவரங்கள் வந்து சேர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டார்ஜிலிங் மாவட்ட நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், “மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.” என்றார்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இதுவரை 9 இறப்புகளை உறுதி செய்துள்ளனர். இன்னும் 2 பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
டார்ஜிலிங்கின் சார்ஸ்லே, ஜெஸ்பீர்கான், மிரிக் பஸ்தி, தார் கான், மிரிக் லேக் ஏரியா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தான் கார் பகுதியில் மட்டும் மண்ணில் புதைந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.
ரெட் அலர்ட்: இதற்கிடையில், மேற்கு வங்கம், டார்ஜிலிங், கலிம்பாங் ஆகிய பகுதிகளில் நாளை (அக்.6) வரை அதிகனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் இன்னும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
தசரா விடுமுறையை ஒட்டி டார்ஜிலிங்குக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்த நிலையில் நிலச்சரிவால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்: இந்நிலையில், டார்ஜிலிங் நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “டார்ஜிலிங் நிலச்சரிவில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்நு குணமாகட்டும்.
கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவியையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.