புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அக்டோபர் 7 இல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இதன்மூலம், அவர் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பாலமாக முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது. அநேகமாக இது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் நடத்துவது உண்டு.
இந்தமுறை கூட்டத்தொடருக்கு முன்பாகவே புதிய குடியரசு துணை தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறார். அக்டோபர் 7-ம் தேதி மாலையில் நடைபெறும். இக்கூட்டத்திற்கான அறிவிப்பு அவரது அலுவலகத்திலிருந்து வெளியாகி உள்ளது.
இது, புதிய குடியரசு துணை தலைவரது எதிர்க்கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் நாடாளுமன்ற அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ’அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகும் குடியரசு துணை தலைவர் அடுத்தடுத்து சில முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.
இவருக்கு முன்பானத் குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் மாநிலங்களவைத் தலைவராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சிகளுடனான உறவு நன்றாக இல்லை. எனவே, எதிர்க்கட்சிகளுடன் சிபிஆர் சந்திப்பில் அனைவரது கவனமும் படர்ந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நல்லுறவை உறுதி செய்வதற்கான அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கூட்டம் அமையும்.’ எனத் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் மாநிலங்களவைத் தலைவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அதேசமயம், ஆளும் மத்திய அரசின் சார்பிலும் பல மத்திய அமைச்சர்கள் குடியரசு துணைத் தலைவரைத் தொடர்ந்து சந்திக்கின்றனர்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் நேற்று முன் தினம் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இதற்கு முன்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்ட பல தலைவர்களும் அவரைச் சந்தித்தனர். இதுவரை இல்லாத வகையில் புதிய குடியரசு துணைத் தலைவரான ராதாகிருஷ்ணன், மாநிலங்களவையை மிகவும் சமுகமாக நடத்த விரும்புகிறார். இதற்கான சில ஆலோசனைகளும் அவருக்கு ஆளும் அரசிடமிருந்து கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.