பரேலி: உத்தரபிரதேசம், கான்பூர் மாவட்டம் ராவத்பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்கிய பேனர்களையும் கொண்டு சென்றனர். இதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இந்நிலையில், பரேலி நகரில் டாக்டர் நபீஸ் அகமதுக்கு சொந்தமான ராஸா பேலஸ் என்ற திருமணம் மண்டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் போலீஸாரின் உதவியுடன் நேற்று இடித்தனர். கட்டுமான விதிகள் மீறப்பட்டுள்ளதால் அந்தக் கட்டிடத்தை இடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பரேலி நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று இடித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல பர்ஹத் என்பவருக்கு சொந்தமான வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சமீபத்தில் நடந்த வன்முறையைத் தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தவுகூர் ராஸா இந்த வீட்டில்தான் தங்கி இருந்தார்.
இதனிடையே, தவுகூர் ராஸாவுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மற்றும் அவருடைய சட்டவிரோத செயல்களுக்கு நிதியுதவி வழங்குவோரை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.