புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்களுக்கு முன்னர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது இஐஏ பல்லைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்தியாவில் பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. தற்போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலைமையிலான அரசின் கீழ் பல திசைகளில் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் கூறியதாவது:
அடிப்படை இல்லாத விஷயங்களை எல்லாம் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசி வருகிறார். வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்திய அரசின் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார். அந்த பேச்சுகள், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் அரசு கொள்கைகளைப் பற்றி வெளிநாட்டு தீய சக்திகள் வெளியிடும் கருத்துகளுக்கு ஒப்பானவை. மலேசியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக ஜாகிர் நாயக் (பிஎப்ஐ) பேசுவதும், கனடாவில் இருந்து கொண்டு காலிஸ்தான் தீவிரவாதி பன்னு பேசுவதற்கும் ஒப்பானது ராகுல் காந்தியின் பேச்சு.
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தூதரக பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லடாக்கில் பருவநிலை பாதுகாப்பு ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லடாக்கில் ஏற்பட்ட வன்முறையில் வாங்சுக் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. அதனால் அவரை என்ஐஏ கைது செய்துள்ளது. இதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இவ்வாறு நிஷிகாந்த் துபே கூறினார்.