புதுடெல்லி: மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில், இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குறிப்பாக, ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்கு உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி வழங்க உள்ளன. இதன்படி, நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவனங்களில் புதிய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பிஹாரில் தொடங்கப்படும் இத்திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
1,200 தொழில் திறன் ஆய்வகம்: பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 நவோதயா வித்யாலயாக்கள், 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் பிரதமர் திறந்து வைத்தார்.
பிஹாரின் புதுப்பிக்கப்பட்ட முதல்வர் சுயஉதவித் தொகை உறுதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி பிஹாரில் சுமார் 5 லட்சம் பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஞானம், அறிவு, திறமையின் பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது. இதுதான் நமது நாட்டின் பலம். ஐடிஐக்கள் என்பது வெறும் கல்வி நிறுவனங்கள் அல்ல. அவை சுயசார்பு இந்தியாவின் பயிற்சி பட்டறைகள். இளைஞர்களின் திறன் மேம்படும்போது இந்தியா மேலும் வலுவாகிறது.
பிஎம்-எஸ்இடியு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐக்களின் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதில் 200 ஐடிஐக்கள் பிரதான மையங்களாகவும், 800 ஐடிஐக்கள் நம்பிக்கை மையங்களாகவும் உருவாக்கப்படும். இந்த திட்டம் மூலம் ஐடிஐ மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். 1,200 தொழில் திறன் ஆய்வகங்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு தொழில் திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த 2 திட்டங்களும் இந்தியாவை திறன்சார் உற்பத்தி மையமாக மாற்ற அடித்தளமிடும்.
10 ஆண்டுகளில் 5,000 ஐடிஐ: கடந்த 2014-க்கு முன்பு இந்தியாவில் 10,000 ஐடிஐக்கள் மட்டுமே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5,000 ஐடிஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. குறிப்பாக பிஹாரில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மனித வளத்தை பயன்படுத்தி பிஹார் மாநிலம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் அரசு சார்பில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் பேர் நிரந்தர அரசு வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
சமீபத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால், நாடு முழுவதும் ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கார், பைக் விற்பனை அதிகரித்துள்ளது.
பிஹாரில் மகளிர் சுயவேலைவாய்ப்புக்காக 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது பிஹாரில் 5 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பிஹாரில் ஒரு காலத்தில் காட்டாட்சி நடந்தது. அப்போது பிஹார் இளைஞர்கள் வேலைதேடி வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பிஹார் அதிவேகமாக முன்னேறி வருகிறது.
பிஹாரில் புதிய திறன்சார் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு ‘பாரத ரத்னா’ விருது பெற்ற கர்பூரி தாக்குர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமூக சேவை, கல்வி உரிமை, நலிவடைந்த பிரிவினருக்காக கர்பூரி தாக்குர் பாடுபட்டார். அவரது தொலைநோக்கு சிந்தனைகளை பிஹாரின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்தை நோக்கி முன்னேறி வருகிறோம்.
பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில், ஐடிஐ கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண் பெற்ற 46 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.