ஜெய்ப்பூர்: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் இருமல் மருந்துகளால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அரசு வழங்கிய மருந்துகளால் உயிரிழக்கவில்லை என்றும் ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்ஸ்வர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கின்ஸ்வர், “இறந்த குழந்தைகள் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். அரசு வழங்கிய மருந்துகளை உட்கொண்ட பிறகு இறக்கவில்லை. இருமல் மருந்துகளால் எந்தக் குழந்தையும் இறக்கவில்லை. ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் , மற்றொருவருக்கு சுவாச தொற்று பிரச்சினை இருந்தது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு அதில் பிரச்சினையில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பெரியவர்களுக்கான மருந்துகள் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டால், அவை தீங்கு விளைவிக்கும். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பொருத்தமானதா என்பதை தெளிவாகக் குறிப்பிடும் ஒரு புதிய முறையை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். அரசாங்கத்தின் தரப்பில் எந்த அலட்சியமும் இல்லை. எங்கள் மருத்துவர்கள் அந்த மருந்தை பரிந்துரைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், அது ஒரு செவிலியர் மற்றும் மருந்தாளரால் குழந்தைக்கு வழங்கப்பட்டது, அப்போதும் கூட அக்குழந்தை ஆரோக்கியமாக உள்ளது, உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லை.
அரசாங்க இருப்பில் உள்ள மருந்துகள் நான்கு முறை சோதிக்கப்பட்டு பாதுகாப்பானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், சந்தேகம் உள்ள இடங்களில் நாங்கள் மீண்டும் மாதிரிகளை சேகரித்து சோதனை நடத்துகிறோம்” எனத் தெரிவித்தார். ராஜஸ்தானில் மூன்று குழந்தைகள் கதிமான் (Gatiman) இருமல் சிரப்பை உட்கொண்ட பிறகு இறந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியது, இதன் விளைவாக செப்டம்பர் 28 அன்று அரசாங்கம் அந்த மருந்தை தடை செய்தது.
மருந்து சோதனை மற்றும் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக ராஜஸ்தான் அரசு, மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் ராஜாராம் சர்மாவை பணி இடைநீக்கம் செய்தது. ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட கேசன்ஸ் பார்மா தயாரித்த 19 மருந்துகளையும், டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் கொண்ட மற்ற அனைத்து சிரப்களையும், மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை மறு உத்தரவு வரும் வரை தடை செய்துள்ளது. முதல்வர் பஜன்லால் சர்மா இந்த விஷயத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இதனை விசாரிக்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.