சென்னை: “பாஜகவின் ‘சி டீம்’ தான் தவெக தலைவர் விஜய். அவரைக் காப்பாற்றும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை என்றைக்கும் தலைகுனிய விடவில்லை. யார் தலைகுனியவிட்டார்கள் என்பது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த வார்த்தைகளை பார்த்தால் தெரியும்.
தமிழகத்தில் இடம் கிடைக்காத பாஜக தமிழகத்தில் யாராவது ஆள் கிடைப்பார்களா? என்று பார்த்துக் கொண்டு இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது. பாஜகவின் ’சி’ டீம் தான் விஜய். இதை முதன்முதலில் சொன்னது நான் தான். தவெகவினர் நீதிமன்றம் குறித்து பேசுவதற்கு நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும்.
விஜய்யைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. தவெக தலைவர் விஜய்யை காப்பாற்றும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.