சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் போதுமான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 603 திறன் வாய்ந்த தண்ணீர் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் 2-வது முதல் 3-வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கிடையில் சென்னையில் மழை வெள்ளத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதுபோல, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில், மழை வெள்ளம் புகுந்துவிடாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் விதமாக, கட்டுமானத் தளங்களில் திறன் வாய்ந்த தண்ணீர் பம்புகள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது சிறியது, பெரியது என பல்வேறு திறன் கொண்ட 603 தண்ணீர் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன.
மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் 292 பம்புகளும், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 151 பம்புகளும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 160 பம்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, மழைக்காலத்தின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராக உள்ளது. இதுதவிர சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் நிறுவனம், நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியன இணைந்து தொழில்நுட்பக் குழுவை அமைத்தன.
சென்னையில் கடந்த ஆண்டு 27 இடங்களில் மழைநீர் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதுபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் என்ன செய்ய வேண்டும் என்று குழு தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.