புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “கடந்த மே மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட போரின்போது 7 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்’’ என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங் டெல்லியில் நேற்று கூறியதாவது: இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று அவர்கள் (பாகிஸ்தான்) கனவு கண்டால், அந்த கனவை நான் கலைக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து கனவிலேயே இருக்கட்டும்.
இந்தியா, பாகிஸ்தான் போரின்போது என்ன நடந்தது என்பது உலகத்துக்கு தெரியும். சுமார் 90 மணி நேரம் அதிதீவிர போர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பெரும் இழப்புகளை சந்தித்தது. போர் நீடித்தால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்பதால் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த அந்த நாடு மன்றாடியது. பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ இந்திய ராணுவ அதிகாரியை நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்.
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. அந்த நாட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். அந்த குறிக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டோம். எனவே பொறுப்புள்ள நாடு என்ற வகையில் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது.
ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் போர் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவை முன்மாதிரியாக கொண்டு உலக நாடுகள் செயல்படலாம். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்கள், ராணுவத் தளங்கள் தகர்க்கப்பட்டன. அந்த நாட்டின் 4 அதிநவீன ரேடார்கள் மற்றும் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் முரித், சாக்லாவில் செயல்பட்ட 2 கட்டுப்பாட்டு அறைகள், ஏராளமான ராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டன.
வானில் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தானின் எப்-16 (அமெரிக்க தயாரிப்பு), ஜேஎப்-17 (சீன தயாரிப்பு) ரகங்களை சேர்ந்த 4 முதல் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய எல்லையில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்த அதிநவீன உளவு விமானம் எஸ்400 ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாகிஸ்தானின் முக்கிய விமானப் படைத் தளங்கள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் விமானப் படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எப்16 ரகத்தை சேர்ந்த 4 முதல் 5 போர் விமானங்கள் தகர்க்கப்பட்டன. வானில் 5, தரையில் 5 என பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு ராணுவ தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.