கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி இனங்களில் ஒன்றுதான் பெட்ட குறும்பர் இனம். பெட்டா என்கிற மலையை குறிக்கும் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மக்கள் குறும்பர் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவாக அறியப்படுகின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தேன் சேகரிப்பு, மீன் பிடித்தல் மற்றும் வன மூலிகைகளை சேகரிக்கும் திறன் கொண்டவர்கள்.
பூர்வகுடிகளான இந்த மக்களுக்கு அரசின் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருப்பதால், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே தவித்து வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே போராடி உயர் கல்வியைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.
அந்த வரிசையில், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய பெட்ட குறும்பர் மாணவி கின்மாரி, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ, எல்.எல்.பி ஹானர்ஸ் பட்டத்தை நிறைவு செய்து தங்கள் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்கிற வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்.
கின்மாரி கூறும் போது, “முதுமலையில் உள்ள பொக்காபுரம் தான் சொந்த ஊர். அப்பா மாறன் கூலித் தொழிலாளி. அம்மா மஞ்சுளா குடும்பத்தை கவனித்து வருகிறார். மூன்று பெண் குழந்தைகளில் நான் தான் கடைசி. பக்கத்தில் உள்ள பொக்காபுரம் அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் முதுமலையில் உள்ள கார்குடி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 9, 10-ம் வகுப்புகளை முடித்து, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்தேன்.
கார்குடி ஆசிரியர் வழிகாட்டுதலில் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தேன். எங்கள் இனத்தின் முதல் நபராக இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதால் நிறைய சவால்கள் இருந்தன. நிதி நெருக்கடி தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அப்பா வேலை பார்க்கும் இடத்தின் உரிமையாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 5 ஆண்டுகளாகப் படித்து தற்போது பி.ஏ எல்.எல்.பி ஹானர்ஸ் பட்டத்தை பெற்றிருக்கிறேன்.
எங்கள் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்பது பெருமையாக இருக்கிறது. எங்களுக்கான உரிமைகள் நிறைய இருக்கிறது. ஆனால், அது எங்களுக்கே தெரியாமல் இருக்கிறது. அவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. பழங்குடிகளை உயர் கல்வியில் முன்னேற்ற வழிவகை செய்ய வேண்டும்.
சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனை ஒழிக்க வேண்டியதே முதல் கடமையாக இருக்கிறது. 3 ஆண்டுகள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பிராக்டிஸ் செய்துவிட்டு நீதித்துறை தேர்வுகளை எழுத வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது’’ என்றார்.