புதுடெல்லி: அசாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்களை கைது செய்து அசாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு படகில் சென்றுள்ளார். கடலில் நீந்தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜுபின் கார்க் மேலாளர் சித்தார்த்த சர்மா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சியாம்கானு மகந்தா ஆகியோர் டெல்லியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை குற்றச்சாட்டுகளையும் அசாம் சிஐடி போலீஸார் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் ஜுபின் கார்க்குடன், கடலுக்கு படகில் சென்ற இரண்டு இசை கலைஞர்கள் சேகர்ஜோதி கோசுவாமி, அம்ரித்பிரவா மகந்தா ஆகியோரை அசாம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரணைக்காக குவஹாட்டி அழைத்து வந்தனர். அவர்கள் 14 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷியாம் கனு மகந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். விசாரணையை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிட வேண்டும்’’ என ஷியாம் கனு மகந்தா கோரியுள்ளார்.