சிவகாசி: சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆய்வு மற்றும் விபத்து அச்சம் காரணமாக முன்கூட்டியே பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 30 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,080-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பிஜிலி, சக்கரம், புஸ்வானம், லட்சுமி, குருவி, மத்தாப்பு, ஆட்டம் பாம், உயரே சென்று வெடிக்கும் பேன்ஸி ஷாட் என 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
தொடக்கம் முதலே சரிவு: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் வட மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தொடர் விபத்துகள், சிறு பட்டாசு ஆலைகள் போராட்டம், காலநிலை மாற்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் ஆகியவற்றால் இந்த ஆண்டு தொடக்கம் முதலே பட்டாசு உற்பத்தி சரிவை சந்தித்தது.
மேலும் பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும், தொழிலகப் பாதுகாப்புத் துறை, மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்கின்றன. விதிமீறல் கண்டறியப்பட்டால் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தால் 85 தொழிற்சாலைகளும், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையால் 45 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகள் விதிகளைப் பின்பற்றி விண்ணப்பித்தால் 30 நாட்களில் மீண்டும் உரிமம் வழங்கப்படும். ஆனால் உரிமம் ரத்து செய்யப்பட்டு, 3 முதல் 8 மாதங்களுக்கு மேலாகியும், மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படாததால் உற்பத்தி குறைந்துள்ளது.
அதேபோல, கடந்த காலங்களில் ஆய்வின்போது முதல்முறை சிறிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் தற்போது சிறிய விதிமீறல்களுக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் உற்பத்தி அனுமதி வழங்க காலதாமதமாவதால் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே பெரும்பாலான பட்டாசு ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன.
இதன் காரணமாக இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்ததால் தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் அதிகம் விரும்பும் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.