சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமையும், ஒவ்வோர் ஆண்டும் பெரிய அளவிலான 2 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்து கொள்கின்றன.
8, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமா, பொறியியல் பட்டம், கலை அறிவில் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதியை உடையவர்களும் இந்த முகாமில் நேரடியாக கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். பதிவுக் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியான நபர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்கள் மட்டுமின்றி பதிவு செய்யாதவர்களும் முகாமில் பங்கேற்கலாம். முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறும் பதிவுதாரர்களின் பதிவும் ரத்துசெய்யப்படாது.
வேலைவாய்ப்பு அலுவலங்கள் வாயிலாக அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் முறை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வேலைவாய்ப்பு பயிற்சித் துறையால் நடத்தப்படும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் பதிவுதாரர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் முன்கூட்டியே அறிவிப்பு செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. தேவையான ஆவணங்களுடன் நேரடியாக முகாம் நடைபெறும் இடத்துக்கு சென்றுவிடலாம். வங்கி, நிதி, காப்பீடு, மருத்துவம், தொழில்நுட்பம், தூய்மை பராமரிப்பு என பலதரப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்கின்றன.
முகாமிலேயே பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டு விடுவதால், உடனடியாக பணியில் சேர்ந்துவிடலாம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது. ரூ.12 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என பலதரப்பட்ட ஊதியங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரத்யேக இணையதளம்: தனியார்துறை வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை வேலைதேடுவோருக்கு தெரிவிக்கும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் www.tnprivatejobs.tn.gov.in என்ற பிரத்யேக இணையதளம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த இணையதளத்தில், எந்தெந்த நிறுவனங்களில் என்னென்ன வேலைகள் காலியாக உள்ளன? எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தேதியில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்ற விவரங்களை எல்லாம் அதில் விரிவாக அறிந்துகொள்ளளாம்.