சென்னை: தமிழக கோயில்களிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 48 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 2 பெண்கள் உட்பட 89 மாணவர்கள், மூன்றாண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்கள் என 108 பேருக்கு அதற்கான சான்றிதழை அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2021-ம் ஆண்டிலிருந்து இதுவரை பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 213 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 43 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண் ஓதுவார்கள் மட்டும் 12 பேர். திமுக ஆட்சியில் இதுவரை 3,707 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
கோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாப்பதற்காக, ஸ்ட்ராங்ரூம்கள் எனப்படும் பாதுகாப்பு அறைகள், இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,800 வரை உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 48 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 28-க்கும் மேற்பட்ட சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் நடந்த சிலை திருட்டுகளில் 10 சதவீதம் கூட இப்போது நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.