சென்னை: ‘மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். விதி மீறலால் உயிரிழப்பு, பொருளாதார இழப்பு ஏற்படுகிறது’ என்று தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் இரா.செல்வம் அறிவுறுத்தி உள்ளார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு.
இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ‘கலாம் சபா’ என்ற நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார். இதை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கடந்த ஆண்டு திறந்துவைத்தார்.
‘கலாம் சபா’ நூலகம் சார்பில் மாதாந்திர வழிகாட்டி கூட்டத்தொடரையும் டில்லிபாபு நடத்தி வருகிறார். அதில் சிறந்த ஆளுமைகள் வரவழைக்கப்பட்டு, அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் 8-வது நிகழ்வாக அக்.1-ம் தேதி ‘ஹார்வர்டு நாட்கள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தோல் ஏற்றுமதி குழு மேலாண் இயக்குநர் இரா.செல்வம் பங்கேற்று, அவர் எழுதிய ‘ஹார்வர்டு நாட்கள்’ நூலில் போக்குவரத்து விதிமீறல் குறித்து எழுதியது தொடர்பாக விஞ்ஞானி டில்லிபாபு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது: உலக நாடுகளில் வனப்பகுதியில் விலங்குகளைப் பாதுகாப்பதற்காக வாகனங்களை வனக் காவலர்கள் தடுத்து நிறுத்துவார்கள்.
ஆனால் இந்தியாவில்தான் மக்களைப் பாதுகாப்பதற்காக, வாகனங்களை தடுத்து நிறுத்தும் சூழல் நிலவுகிறது. விதி மீறலால் உலக அளவில் ஏற்படும் 10 மரணங்களில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது. எனவே, மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறலால் உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
கல்வி, திறமை, அறிவை வளர்ப்பதில்தான் முந்தி செல்ல முயல வேண்டும். போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வு, மற்றவர் நிர்பந்திக்காமல் உங்களுக்குள் எழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் டில்லிபாபுவின் தந்தையும், தொழிற்சங்கவாதியும், ‘மிஸ்டர் மெட்ராஸ்’ பட்டம் வென்றவருமான ச.விஜயகுமார், ‘ஆளுமை சிற்பி’ மாத இதழ் ஆசிரியர் மெ.ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.