பெங்களூரு: பெங்களூருவில் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து மனைவியின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
பெங்களூரு புட்டேனஹள்ளியை சேர்ந்த 27 வயதான பெண் போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும் புட்டேனஹள்ளியை சேர்ந்த சையத் இனாமுல் (35) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் ஆனது. வரதட்சணையாக 340 கிராம் நகை, இரு சக்கர வாகனமும் கொடுத்தோம். பின்னர் என் கணவர் சையத் இனாமுலுக்கு ஏற்கெனவே திருமணமானது தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என்னை தாக்கினார். மேலும் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து அவர் என்னோடு நெருக்கமாக இருப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு 19 பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர் என்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து அவர்கள் பெங்களூரு வரும்போது என்னை அவர்களுடன் பாலுறவு வைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்.
இதற்கு மறுத்ததால் எனது கணவரும், அவரது பெற்றோரும் என்னை கடுமையாக தாக்கி துன்புறுத்துகின்றனர். இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து சையத் இனாமுல், அவரது பெற்றோர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சையதை தேடி வருகின்றனர்.