அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில், 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4, ஜஸ்பிரீத் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களும், சாய் சுதர்ஷன் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 18 ரன்களும், கே.எல்.ராகுல் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் கில், சரியாக 50 ரன்கள் எடுத்த நிலையில், ராஸ்டன் சேஸ் பந்துவீச்சில், ஜஸ்டின் கிரீவ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ராகுலுடன், ஜூரல் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் அபாரமாக விளையாடிய கே.எல்.ராகுல் 197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த நிலையில், வாரிக்கன் பந்து வீச்சில் கிரீவ்ஸிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். இதன் பின்னர் ஜூரலுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அபாரமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். அதிரடியாக விளையாடிய ஜூரல், டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 210 பந்துகளைச் சந்தித்து 125 ரன்கள் எடுத்திருந்தபோது, காரி பியரி பந்துவீச்சில், ஷாய் ஹோப்பிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜூரல் – ஜடேஜா ஜோடி, 206 ரன்களைக் குவித்தது. மறுமுனையில் அதிரடியாக ரவீந்திர ஜடேஜா, சதம் விளாசினார். ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்துள்ளது.
ஜடேஜா 104 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ராஸ்டன் சேஸ் 2, ஜோமல் வாரிக்கன், காரி பியரி, ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
11-வது சதம்: இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தனது 11-வது சதத்தை விளாசியுள்ளார். 6-வது போட்டியில் விளையாடி வரும் துருவ் ஜூரலுக்கு, டெஸ்ட் போட்டிகளில் இது முதலாவது சதமாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் தனது 6-வது சதத்தைப் பதிவு
செய்தார்.
3 வீரர்கள், 3 சதம்: இந்தப் போட்டியில் இந்திய அணியின் 3 வீரர்கள் சதமடித்துள்ளனர். 2025-ல் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் ஒருடெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 3 பேர் சதமடிப்பது இது 3-வது முறை. இந்த ஆண்டில் லீட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால், கில், பந்த் ஆகியோரும், மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தரும் சதம் விளாசியிருந்தனர். தற்போது 3-வது முறையாக ராகுல்,ஜூரல், ஜடேஜா ஆகியோர் சதமடித்தனர்.
4-வது முறை: ஓராண்டில் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் 3 பேர் சதம் விளாசியிருப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு 1979, 1986, 2007-ம் ஆண்டுகளில் இந்திய அணி வீரர்கள் 3 பேர், ஒரே இன்னிங்ஸில் சதம் விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.