புதுடெல்லி: நாட்டில் வழக்கமாக நவராத்திரி மற்றும் பண்டிகை காலத்தில் மக்களின் நுகர்வு அதிகரிக்கும். ஆண்டு விற்பனையில் 40 முதல் 45 சதவீதம் இந்த பண்டிகை காலத்தில் மட்டுமே நடைபெறும். இந்த முறை ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இதனால் கார்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மக்களின் நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. குறிப்பாக கார்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்தது.
நவராத்திரியின் முதல் நாளில் 30,000 கார்களை விற்ற மாருதி சுசுகி நிறுவனம், 8 நாட்களில் 1.65 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. பண்டிகை காலத்தில் கார்களின் முன்பதிவு 2 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவராத்திரி காலத்தில் 85,000 மாருதி வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.
மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் விற்பனை இந்தாண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 50,000 வாகனங்களை விற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த விற்பனை 72 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இதேபோல் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.