சென்னை: ஆளுநர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, விமான நிலையம் உட்பட சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வர், அமைச்சர்களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.10 மணிக்கு டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மற்றொரு மின்னஞ்சலில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. கிண்டி ஆளுநர் மாளிகை, நடிகை த்ரிஷா வீடு, நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களுக்கும் அடுத்தடுத்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
போலீஸார் உடனடியாக இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து,வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் போலீஸார் விரைந்து சென்று அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். கிண்டி ஆளுநர் மாளிகை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு, அதே பகுதியில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, தியாகராய நகரில் உள்ள கமலாலயம், சென்னை விமானநிலையம் என மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால், சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.வி சேகர் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கடந்த 3 நாளில் 5 முறை எனது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அக்கறை எடுத்துக் கொண்டு,போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை செய்கின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்” என்றார்.