சென்னை: விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “விஜய் என்ன தவறு செய்தார்? எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நான் நேரில் பார்த்தவன். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா? வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம். ஆனால் அது கிரிமினல் குற்றம் இல்லை.
ஆனால் கரூரில் அந்த இடத்தில் அனுமதி கொடுத்த எஸ்.பி.யை முதலில் சஸ்பெண்ட் செய்யவேண்டும். திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். வேங்கைவயல் சம்பவத்துக்கு திருமாவளவன் நேரில் சென்றாரா? ஆளும் திராவிட அரசு சொம்படிப்பதை தவிர வேறு வேலையே கிடையாதா அவருக்கு? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? திமுகவில் அறிவாலய எடுபிடியாக இருக்கிறார்”இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.
முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.
இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக – தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர வஞ்சனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என யார் அழுத்தம் கொடுத்தது” என்று கூறியிருந்தார்.