அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா என மூவரும் சதம் விளாசி அசத்தி உள்ளனர். இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து இந்திய அணி பேட் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று (அக்.3) தொடங்கியது. கேப்டன் கில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ராகுல், 190 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இது இந்திய மண்ணில் அவர் பதிவு செய்துள்ள 2-வது சதமாகும். கடைசியாக கடந்த 2016-ல் தனது சதத்தை அவர் இந்தியாவில் பதிவு செய்திருந்தார். அடுத்த சில பந்துகளில் அவர் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் 5-வது விக்கெட்டுக்கு துருவ் ஜூரெல் மற்றும் ஜடேஜா இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். ரிஷப் பந்த் காயாமடைந்துள்ள நிலையில் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் துருவ் ஜூரெல். அண்மைய உள்ளோர் போட்டிகளில் நேர்த்தியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். 190 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை அவர் விளாசினார். அவர் 210 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா உடன் சேர்ந்து 206 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.
168 பந்துகளில் ஜடேஜா சதம் எட்டினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 104, வாஷிங்டன் 9 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.