கரூர் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், திமுக அரசை நோக்கி த.வெ.க, பாஜக, அதிமுக கை நீட்டும் நிலையில், ‘பாஜகவோடு விஜய் கூட்டு சேருகிறார்’ என்ற கோணத்தில் முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேச ஆரம்பித்துள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோனது. இந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னர் வீடியோ வெளியிட்ட விஜய், அரசை குற்றம்சாட்டும் வகையில் பேசினார். அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ‘நேபாள புரட்சி, இலங்கை புரட்சி’ என்றெல்லாம் தொண்டர்களை உசுப்பேற்றி பதிவை வெளியிட்டு, உடனடியாக நீக்கினார்.
அதேபோல, ‘இந்தச் சம்பவத்துக்கு காவல் துறையே பொறுப்பு, செந்தில் பாலாஜி ஏதோ செய்துவிட்டார், திமுக அரசு சதி செய்துவிட்டது’ என்கிற ரீதியில் தவெகவினர் பேச ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் விதம் விதமாக வந்து பேசிக்கொண்டிருந்தாலும், தவெக தலைவர் விஜய்யோ, இரண்டாம் கட்ட தலைவர்களோ, ஏன் அக்கட்சியின் மாவட்ட தலைவர்களோ கூட இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியுதவிகூட இன்னும் பாதிக்கப்பட்டோரிடம் வழங்கப்படவில்லை.
தவெக என்று இல்லை, அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் திமுக அரசையும், காவல் துறையையும் குற்றம்சாட்டினர். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று பாஜக, தங்கள் எம்.பிக்கள் குழு ஒன்றை உடனே விசாரணைக்கு அனுப்பியது. அடுத்ததாக தற்போது பாஜக எம்பிக்கள் குழு, ‘இந்த சம்பவத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு’ என தமிழக முதல்வரிடம் அறிக்கை கேட்டு கடிதமும் எழுதியுள்ளது.
தமிழக அரசு சார்பில் முதலில் கரூரில் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அடுத்ததாக முதல்வர் ஒரு காணொலி வெளியிட்டார். பின்னர் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் விரிவான விளக்கம் அளித்தார். தவெகவினர் குற்றம்சாட்டும் செந்தில் பாலாஜியும் மணிக்கணக்கில் விரிவான பதிலை சொன்னார். ஆனால், தவெக தரப்பில் ஒருவர் கூட இன்னும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. தங்கள் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களையும் வெளியிடவில்லை. ஏன்… இதுவரை ஒருவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கூட பங்கெடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, இப்போது கரூர் சம்பவத்தின் மூலம் விஜய்யை பாஜக தங்கள் பாதைக்கு கொண்டு வந்துவிட்டதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தனது குற்றச்சாட்டில், “தமிழகத்தில் மூன்று முறை மிகப் பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத ஒன்றிய நிதியமைச்சர், கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணைக் குழு அனுப்பாத பாஜக, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள்.
இது தமிழ்நாட்டின் மீதுள்ள அக்கறை அல்ல. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. எனவே, இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக பாஜக உள்ளது” என்று சொல்லியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே, விஜய்யின் தற்போதைய செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், சீமானும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். அவர், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். ஆனால், விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு கோணத்தில் காய்களை நகர்த்துகிறது. கரூர் உயிரிழப்புகள் சம்பவத்தில் தங்கள் பக்கம் சில குறைபாடுகள் இருப்பதை உணர்ந்த திமுக அரசு, தொடக்கத்தில் யார் மீதும் பழிபோடாமல் கடந்து செல்லவே விரும்பியது. ஆனால், திமுக மீது வீசப்படும் குற்றச்சாட்டுகளின் வீச்சு அதிகமாகியுள்ளதால், இப்போது ‘பாஜகவால் விஜய் இயக்கப்படுகிறார்’ என்ற கருத்தோடு எதிர்ப்பு அரசியலை தொடங்கியுள்ளது.
அதிமுகவும், பாஜகவும் இந்த விவகாரத்தில் தங்கள் எதிரியான திமுகவை மொத்தமாக டேமேஜ் செய்வது முதல் இலக்காக இருந்தாலும், ‘திமுக இப்படித்தான் செய்யும். அக்கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற எங்களோடு கூட்டணிக்கு வாருங்கள்’ என்ற டிமாண்டோடு விஜய்யை பாதுகாத்து, சில அழுத்தங்களோடு கூட்டு சேர்க்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் கரூர் விஷயத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்த சீமான், விஜய் வெளியிட்ட வீடியோவுக்குப் பின்னர் கொந்தளித்து பேச ஆரம்பித்துள்ளார். அந்த வீடியோவில் விஜய் ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை எனச் சொல்லி, பாஜக அவரோடு கூட்டணி வைக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டுகிறார்.
ஒரு பக்கம் விஜய் வைக்கும் குற்றச்சாட்டுகள் தங்களுக்கு சேதாரத்தை உருவாக்கும் என திமுக உணர்ந்தாலும், அவர்களால் இப்போது தவெக மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏற்கெனவே நிலைமை கைமீறிப்போயுள்ளதால், விஜய் அல்லது அக்கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தேவையின்றி வளர்த்துவிட்டது போலாகிவிடும். எனவே பொறுத்திருந்து எதையும் செய்வோம் என்று காத்திருக்கிறது திமுக. தற்போது, தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டதால் காட்சிகள் மாறக் கூடும்.
அதேவேளையில், உயர் நீதிமன்றம் இன்று தவெகவுக்கு பல குட்டுக்களை வைத்துள்ளது. “தவெகவின் செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. என்ன மாதிரியான கட்சி இது. கரூர் துயரத்துக்கு தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக்கட்சி தலைவரின் மனநிலையை காட்டுகிறது. அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பை கூட தவெக பின்பற்றவில்லை.
தவெக தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வு மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு. சம்பவம் நடந்தவுடன் கட்சி தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மறைந்துவிட்டனர். சம்பவம் நடைபெற்றதும் மற்ற கட்சியினர் உதவிக்கு விரைந்தபோது தவெக நிர்வாகிகள் காணாமல் போனது ஏன்? விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்கலாம்” என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் துயரத்தை முன்வைத்து தமிழகத்தில் நான்கு முனைகளிலும் ஆளுக்கொரு திசையில் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.