அரூர்: ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கடத்தூர் மற்றும் அரூர் நகரங்களில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசியவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 இடம் வெல்லும் என்று கனவு காண்கிறார். இந்த கூட்டமே அடுத்தாண்டு அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்பதற்கு சாட்சி. முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை நம்பிக்கொண்டு இருக்கிறார், கூட்டணி வேண்டும் ஆனால் அதுமட்டும் போதாது, மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஒருபோதும் இந்த தேர்தலில் திமுகவுக்கு அது நடக்காது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10 % கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். எனது சுற்றுப் பயணத்தில் 166-வது தொகுதியாக அரூரில் பேசுகிறேன், எனக்கே ஆச்சரியம், பல தொகுதியில் பேசும்போது ஒரு காவலர் கூட பார்க்கவில்லை. ஆனால் இன்றைய தினம் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இந்த பாதுகாப்பை மற்ற கட்சிக்கும் வழங்கியிருந்தால் 41 உயிர் பறி போயிருக்காது. எதுக்கு இந்த ஓரவஞ்சணை?
நான் காவல்துறையை குறை சொல்லவில்லை, அதை இயக்குபவர் முதல்வர் தான். தமிழ்நாட்டில் கூட்டம் நடந்தால் அரசு மக்களை பாதுகாத்து, அந்தந்த கட்சிக்கு நல்லது செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இனியாவது மக்களுக்கான பாதுகாப்பை சிந்தித்து சிறந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை.
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5,400 கோடியுமாக இந்த நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளுக்காக குடி மராமத்துத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதில் இருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒரு பக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. இந்த திட்டத்தை நிறுத்திவிட்டனர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் குடி மராமத்துத் திட்டம் தொடரும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின் போது பயிர்க் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம்.
இந்த பகுதியில் தென்பெண்ணையாற்றின் உபரி நீரை ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் திட்டத்தின் மூலமாக இங்கிருக்கும் 66 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். அரூர் குமரன் அணைக்கட்டு திட்டம் அரசாணை வெளியிட்டு பணி தொடங்கப்பட்டது, திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
அரூரில் 93 ஏரிகளுக்கு தெண்பெண்ணையாற்று உபரி நீரை சென்னக்கால் திட்டம் மூலம் செயல்படுத்த கேட்டுள்ளீர்கள், நிச்சயம் பரிசீலிக்கப் படும். தமிழக கிராமப் புறங்களில் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் அதாவது 41 % பேர் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். வெறும் 9 பேருக்குத் தான் மருத்துவக் கல்வி கிடைத்தது. அத்தகைய ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5 % உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2,818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். மின் கட்டணம் இந்த ஆட்சியில் 67 % உயர்த்திவிட்டனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு லேப் டாப் கொடுக்கப்படும், திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும், அதோடு மணப் பெண்ணுக்கு பட்டுச் சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி கொடுக்கப்படும்.

நீட் தேர்வு ரத்து செய்வது தான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின், ரத்து செய்தாரா ? நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி, ரகசியம் சொன்னாரா ? மக்களின் ஆசையைத் தூண்டி வாக்குகளை பெற ஸ்டாலின் அரசு போடுகின்ற நாடகம் இது.
மகளிர் உரிமைத் தொகை பற்றி ஸ்டாலின் பேசுகிறார். அதிமுக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்தான் வேறு வழியின்றி 28 மாதங்கள் கழித்து கொடுத்தார். அதிமுக ஏற்கனவே 1,500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம். அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டம் தொடரும் என்பதை இந்நேரத்தில் தெரிவிக்கிறேன்.
உங்கள் கோரிக்கைப்படி தென்பெண்ணையாறு தடுப்பணை கட்டப்படும். கோட்டைப்பட்டி ஏரிக்கு நீர் கொண்டு செல்லப்படும், அணை தூர்வாரப்படும், தீர்த்தமலை சுற்றுலாத் தளமாக பரிசீலிக்கப்படும். அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பை…பை… ஸ்டாலின்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த பிரச்சார பயணத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சரும் தருமபுரி மாவட்ட கழக செயலாளருமான கே.பி அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் மற்றும் கோவிந்த சாமி ஆகியோர் உடன் இருந்தனர். இக்கூட்டத்தின் போது அதிமுக தொண்டர்கள் பொது மக்களோடு நடிகர் விஜய்யின் தவெக தொண்டர்களும் கையில் கொடியுடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.