சென்னை: கீழடி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன். திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.
பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதி செய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.