தூத்துக்குடி: “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். ஆனால், விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல அசிங்கம்.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுக தனது கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளதாக சொல்கிறது. இந்த தேர்தலில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் வாக்கை எளிதாக திமுகவால் பெற முடியாது.
ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதற்கு விசாரணைக் குழுவை பாஜக அனுப்பியுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் மக்களே போராடிய போது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?. அப்போது காவல்துறை, மாவட்ட ஆட்சியர் போராடியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே?. வன்முறை ஏற்பட்டாலும் கூட கண்ணீர் புகைக்குண்டு வீசித்தானே கூட்டத்தை கலைத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் பாஜக விசாரணைக்குழு வந்திருக்க வேண்டியதுதானே?.
கரூர் துயரம் ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காண்பித்திருக்க மாட்டார்கள். இப்போது சில மாதத்தில் தேர்தல் வருவதால், அரசியல் செய்வதற்காக உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்பியுள்ளார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். அதற்கு அவர் பொறுப்பேற்கவே இல்லையே?. ‘இந்த சம்பவத்துக்கு காரணமாகிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள், இது வலிமிகுந்ததாக உள்ளது, இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ‘அங்கு நடக்காதது இங்கு ஏன் நடந்தது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், சின்ன இடத்தை கொடுத்தார்கள்’ என விஜய் சொல்கிறார்.
நீங்கள் கேட்ட இடம்தானே இது. அங்குதானே எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு முன்னர் கூட்டம் நடத்தினார். சிறிய இடமாக இருந்தால், அந்த இடம் வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டியதுதானே. கரூருக்கு அன்று வந்தவுடனே காவல்துறைக்கு நன்றி தெரிவித்து விஜய் பேசினார். சாவு விழுந்தவுடன் அந்த காவல்துறை மீது ஏன் பழிபோடுகிறார். இதனை கேட்கும் போது கடுமையான கோபம் வருகிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியாளர்களை, சாதனையாளர்களை அழைத்து பேச வைக்காத தமிழக அரசு, திரைப்பட நடிகர்களை, இயக்குநர்களை பேச வைக்கிறார்கள். கல்வி விழாவுக்கு கூட நடிகர்களை அரசு அழைத்தால், அப்புறம் நடிகர்கள் ஏன் நாடாள துடிக்க மாட்டார்கள். நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம்.
விஜய் பேசுவதை அவரின் ரசிகர்கள் கேட்பதே இல்லை, கத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதற்காட்சி சினிமாவுக்கு போவதுபோல விஜய் கூட்டத்துக்கு வருகிறார்கள், இது தெருக்கூத்து.
விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல, அசிங்கம்.
நாங்கள் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிட உள்ளோம், 150 வேட்பாளர்களை அறிவித்துவிட்டேன். இப்போது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் எங்கே போனார். அப்போது நாங்கள்தான் களத்தில் நின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்