சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஆர்எஸ்எஸ் மீது சுமத்திய சட்ட விரோத கொலைப்பழி பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்.எஸ் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதூறாக கருத்துகளை தெரிவித்து, அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
கரூர் கோர விபத்தில் 41 பேர் பலியான உயிரிழப்பு சம்பவத்தின் அரசியல் சதி குறித்து, நிர்வாக சீர்கேடுகள் குறித்து உண்மைகளை வெளிக்கொணர தமிழக மக்கள் கோபத்துடன் கேள்வி கேட்பதை திசை திருப்பும் முயற்சியாக முதல்வர் ஸ்டாலின் ஆர்எஸ்எஸ் மீது பொய் பிரச்சாரம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் ஆர் எஸ் எஸ் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு எதிராக, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 39 பேர் நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். பொய் வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
ஆர்எஸ்எஸ் பற்றி இப்போது பேசும் முதல்வர் ஸ்டாலின், கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் தந்தை கருணாநிதி திராவிடர் கழகம் போல் ஆர்எஸ்எஸ்-ம் ஒரு சமுதாய இயக்கம் என்று தான் சொன்னார். இப்போது வயதாகி விட்டதால் இந்த வரலாறை நீங்கள் மறந்து விட்டீர்களா? தேர்தல் அரசியலுக்காக மறைத்து விட்டீர்களா?
பெரியார் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கொண்டாட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதை எதிர்த்து தான் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் இந்த வரலாறும் ஞாபகமறதி காரணமாக உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரவில்லை.
மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக் கொண்டு, நேர்மைக்கும் சேவைக்கும் இலக்கணமான ஆர்எஸ்எஸ், பாஜக இயக்கங்களை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை.
1967தேர்தலில் பெரியார் காங்கிரஸ் கட்சியை ஆதரித்த போது திமுகவினர், பெரியாரைப் பற்றி என்னென்ன பேசினார்கள். பெரியார் அண்ணாதுரையையும் கருணாநிதியையும் திமுகவையும் எப்படி எல்லாம் விமர்சித்தார் என்பதை உங்கள் பழைய முரசொலி நாளிதழ்களை எடுத்துப் பார்த்தாலே தெரியும். உங்களுக்கு தற்பொழுது முரசொலி அலுவலகத்தின் விலாசமே தெரியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கடி முரசொலி அலுவலகம் வருவார்.
முதல்வர் ஸ்டாலின், நீங்கள் முரசொலி கூட படிக்காத போது திமுகவின் பழைய வரலாறு தெரியாத பொழுது, மகாத்மா காந்தியின் படுகொலை குறித்தும் கோட்சே குறித்தும் தேசத்தின் வரலாறு தெரியாமல் இந்த படுகொலையில் உலகின் மிகப்பெரிய சேவை இயக்கமான ஆர்எஸ்எஸ்-ஐ அவதூறாக சித்தரிப்பது கடும் கண்டனத்துக்குரியது. சட்ட விரோதமானது.
உங்களின் தனிப்பட்ட வார் ரூம் இன் ஐந்து பேர் குழு மாதிரி யாரோ எழுதிக் கொடுப்பதை, என்ன ஏதுவென்று அறியாமல் தேர்தல் விளம்பர அவதூறு அரசியலுக்காக படித்து வரலாற்று பிழை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திருமாவளவன், ஒரு காலத்தில் திமுகவில் பணியாற்றி, திமுக பட்டியல் இன மக்களுக்கு எதிரான இயக்கம் என்பதை உணர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியை உருவாக்கினார். திருமாவளவன் பட்டியலின மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பார் என்ற முழுமையான நம்பிக்கையில் மூப்பனார் திருமாவளவனுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவிர்க்க முடியாத கட்சியாகவும் திருமாவளவன் தவிர்க்க முடியாத தலைவனாகவும் உருவாவதற்கு வழி வகுத்தார்.
2001 தேர்தலில் பட்டியல் இன மக்களுக்கு எதிரான திமுக கட்சியை வீழ்த்த வேண்டும் என்று பாஜக கூட்டணியில் இடம் பெற்ற திருமாவளவன் அன்று மூப்பனாரின் கரம் பற்றி அரசியல் தலைவனாக உருவெடுத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது.
இன்று பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு தேர்தல் அரசியலுக்காக மத்திய மோடி அரசு பட்டியலின மக்களுக்கு செய்து வரும் அற்புத திட்டங்களை மறைத்து விட்டு, ஆர்எஸ்எஸ் குறித்தும் பாஜக குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறு அரசியலை மகிழ்ச்சியுடன் விரும்பிய நீங்கள் “கள்ள உறவு திமுக” என்று திருமாவளவன் கூறியதற்கு மட்டும் ஏன் பதில் சொல்லவில்லை?*
தமிழக வெற்றி கழகத்துடன் திமுக கள்ள உறவு வைத்திருக்கிறது என்று திருமாவளவன் சொன்னதுக்கு கூட உங்களால் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் ஏன் தடுமாறுகிறீர்கள். திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலகி விடுவாரா என்ற பயம்?
இது போன்ற அவமானங்களை எல்லாம் சந்தித்துக் கொண்டு அரசியல் செய்யும் நீங்கள், உலகின் மிகப் புனிதமான அற்புதமான சேவைக்கு இலக்கணமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீது கொலை பழியை சுமத்தி பேசுவது நியாயமா?
உங்களுக்கு பாஜக மீது பயம் வந்துவிட்டது. சென்ற தேர்தலிலேயே கூட்டணி கட்சியுடன் தொகுதி பேரம் பேசும் போது நீங்கள் கொடுத்த தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் பாஜக உள்ளே நுழைந்து விடும் என்று சொன்னீர்கள். இப்போதும் தமிழ்நாட்டில் தேசியக் கட்சியான பாஜக தவிர்க்க முடியாத சக்தி ஆகிவிட்டது.திராவிடம் மாடல் இவையெல்லாம் இந்த 2026 தேர்தலில் நிச்சயம் காணாமல் போகும்.
திருமாவளவன் போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகளை நேரடியாகவும், சீமான் போன்ற பிரிவினைவாதிகளை மறைமுகமாகவும், வலது,இடது கம்யூனிஸ்ட் கட்சிகளை ஊழல் பணத்தை அன்பளிப்பாக அளித்தும் தன்மானத்தையும் சுயமரியாதையும் இழந்து தேர்தல் அரசியல் செய்யும் முதுகெலும்பில்லாத திமுக இயக்கத்தை தமிழக மக்கள் இனி ஏற்க மாட்டார்கள்.
இதனால்தான் திராவிடர் கழக வீரமணி கூட திமுகவை அன்று அங்கீகரிக்கவில்லை. சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு தான் தந்தார். கருணாநிதிக்கு அளிக்கவில்லை. எனவே ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும், பிரதமர் மோடியையும் அவதூறு செய்வதை விட்டுவிட்டு மக்கள் நல அரசியல் செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.