புதுடெல்லி: “உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் சக்தியாக இந்தியா உள்ளது. அதேநேரத்தில், இதில் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ‘கவுடல்யா பொருளாதார மாநாடு 2025’-ல் கலந்து கொண்டு ‘கொந்தளிப்பான காலத்தில் செழிப்பைத் தேடுதல்’ என்ற தலைப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக இந்தியா திகழ்கிறது. அதேநேரத்தில், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்றத்தன்மையின் அபாயங்கள் பெரும் சவாலாகவே உள்ளன.
சர்வதேச ஒழுங்கு மாறி வருகிறது. வர்த்தக அளவு மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது. கூட்டணிகள் சோதிக்கப்படுகின்றன, முதலீடுகள் புவிசார் அரசியல் வழிகளில் மாற்றியமைக்கப்படுகின்றன. பகிரப்பட்ட உறுதிமொழிகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.
நாம் எதிர்கொள்வது தற்காலிக இடையூறுகள் அல்ல, மாறாக ஒரு கட்டமைப்பு மாற்றமாகும். இதில் சில கேள்விகள் இருக்கின்றன. இந்த மாற்றத்தின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது? புதிய சமநிலை எப்படி இருக்கும்? அதை யார் வடிவமைப்பார்கள், எந்த அடிப்படையில்?
அதேநேரத்தில், நிதி ஒருங்கிணைப்பு, மூலோபாய சீர்திருத்தங்கள், கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் போன்ற வலுவான உள்நாட்டு காரணிகளால் இந்தியப் பொருளாதாரம் நங்கூரமிடப்பட்டுள்ளது. இது, வெளிப்புற அதிர்ச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கிறது. அதேநேரத்தில், நாம் மெத்தனமாக இருந்துவிட முடியாது.
எரிசக்தி பாதுகாப்பு, புத்தாக்கம், தொழிலாளர் சந்தைகள், முதலீட்டுத் தேவை ஆகியவை காரணமாக வளரும் நாடுகள் கடினமான சமரசங்களை எதிர்கொள்கின்றன. இந்த வர்த்தகப் பரிமாற்றங்களில் உள்ள சவால்கள் எளிதில் தீர்க்கப்படுவதில்லை.
அதிர்ச்சிகளை உள்வாங்கும் நமது திறன் வலுவாக உள்ளது. வேறு இடங்களில் எடுக்கப்படும் முடிவுகள் நமது விதிகளைத் தீர்மானிக்கும் உலகில் நாம் செயலற்ற பார்வையாளர்களாக இருக்க முடியாது. எனவே, உலகளாவிய விளைவுகளை வடிவமைப்பதில் வளரும் நாடுகள் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும். சாத்தியமான இடங்களில் விளைவுகளை வடிவமைக்க வேண்டும். தேவையான இடங்களில் சுயாட்சியைப் பாதுகாக்க வேண்டும்.
எனவே, இந்த தருணத்தை ஒரு நெருக்கடியாக மட்டுமல்லாமல், ஒரு வளைவுப் புள்ளியாகவும் கருதுவோம். நமக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க மட்டுமல்லாமல், நாம் உருவாக்க விரும்பும் எதிர்காலத்தின் வரையறைகளை வகுக்க உரையாடுவோம்” என தெரிவித்துள்ளார்.