முகமது சிராஜ் தன் பந்து வீச்சில் புதிய மெருகேற்றியுள்ளார், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களிலிருந்தே இதைப் பார்த்து வருகிறோம். நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிராகவும் அதே போல் தன் ‘வாபுள் சீம்’ என்ற பந்தின் தையலை வித்தியாசமாகப் பிடித்து காற்றில் பந்து தள்ளாடிக் கொண்டே வருமாறு வீசி மே.இ.தீவுகளின் வீரர்களை சந்தேகத்திலேயே வைத்திருந்தார்.
வழக்கமாக பந்தின் தையலை நேராகப் பிடித்து கடைசி நேர மணிக்கட்டு விசையில் பந்தை எழுப்புவதும், திசை மாற்றுவதும் வழக்கம். ஆனால் சிராஜ் ஒன்று பந்தின் தையலைக் குறுக்காகப் பிடிக்கிறார் இல்லையெனில் ஒரு கோணத்தில் பிடித்து ஒரு கோணத்தில் பந்தை அந்த வேகத்தில் செலுத்தும் போது பந்து ஆடிக்கொண்டே வரும். இதனால் பேட்டர்கள் பந்து எப்படி ஸ்விங் ஆகும் என்பதைக் கணிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஓவல் டெஸ்ட் போட்டியில் அந்த ஃபேமஸ் கடைசி விக்கெட் பந்து இப்படித்தான் காற்றில் ஆடியபடியே வந்ததால் அட்கின்சனுக்குப் புரியவில்லை ஸ்டம்ப் பதம் பார்க்கப்பட்டது இந்திய அணி வெற்றியுடன் தொடரை 2-2 என்று சமன் செய்தது.
நேற்று ராஸ்டன் சேஸிற்கு அப்படிபப்ட்ட பந்தைத்தான் வீசினார். நீண்ட நேரம் இன்ஸ்விங்கர்களாக வீசி வந்தர், இப்படி பந்தின் தையலை வித்தியாசமாகப் பிடித்ததன் மூலம் பந்தை வெளியே ஸ்விங் செய்தார், சேஸ் வழக்கம் போல் இன்ஸ்விங்கர் என்று எதிர்பார்த்தார், இல்லை அது வெளியே அவர் மட்டையை இழுத்தது. இதில் வேடிக்கை என்னவெனில் பந்து உள்ளே ஸ்விங் ஆகிறது என்று விக்கெட் கீப்பர் ஜுரெல் கால்கள் தவறான திசையை நோக்கிச் சென்றது.
சேஸ் அவுட் ஆகும் போது வெஸ்ட் இண்டீஸ் 105/6 இதில் சிராஜ் 4 விக்கெட்டுகள். பிராண்டன் கிங்கிற்கும் அதே போல் தான் பந்தின் தையலை வித்தியாசமாகப் பிடித்து ஒரு ஆங்கிளில் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்ய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே என்று கிங் ஆடாமல் விட்டு பெருந்தவறிழைத்தார், ஸ்டம்புகளை இழந்தார்.
ஆட்டம் முடிந்தவுடன் சிராஜ் கூறும்போது, “வாபுள் சீம் பந்து ஒன்று பிட்ச் ஆன பிறகு பந்து நேராகச் செல்லும் இல்லையெனில் வலது கை பேட்டர்களை நோக்கி ஆஃப் கட் ஆகும். நான் வாபுள் சீம் பந்தை எப்போது இன்ஸ்விங்கராகத்தான் வீசுவேன். ஆனால் பந்தின் பளபளப்பு இருக்கும் பகுதியில் அது நேராகச் செல்லும் இது பேட்டர்களுக்கு கடும் குழப்பங்களை விளைவிக்கும்” என்றார்.
கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், ஆனால் அனைத்தையும் தாண்டி ‘பியூர் ஸ்கில்’ என்பார்களே அதுதான் சிராஜ். அவர் பந்து வீச்சை மிகவும் மகிழ்ச்சியுடன் விரும்பி வீசுகிறார் அதனால்தான் அவருக்கு சூழ்நிலையின் அழுத்தம் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. பரிசோதனை முயற்சியாக என்னென்னவோ செய்து பார்க்கிறார். இத்தகையப் பிட்ச்களில் கடும் வெயிலில் ஏதாவது செய்து விக்கெட்டுகளைக் கழற்ற வேண்டும் இல்லையெனில் வெயிலில் காய வேண்டியதுதான்.
“4 விக்கெட்டுகளும் ஓசியில் வந்ததல்ல பிரதர், உழைத்து எடுத்த விக்கெட்டுகள். 5வது விக்கெட் விழவில்லையே” என்றார், ஜஸ்டின் கிரீவ்ஸ் 3வது நடுவரால் காப்பாற்றப்பட்டதால் 5வது விக்கெட் இவருக்குக் கிடைக்கவில்லை. சிராஜ் இந்திய அணிக்குக் கிடைத்த ஒரு வித்தியாசமான பவுலர், தினசரி ஏதாவது புதிதான ஒன்றை முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். சபாஷ் சிராஜ்.