புதுடெல்லி: குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் பிறந்த நாளையொட்டி சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. என்றாலும் இந்த அனுமதி, தேர்வு செய்யப்பட்ட குழுக்களுக்கு மட்டுமே பொருந்தும். தகுதி வாய்ந்த பக்தர்களை பஞ்சாப் மாநில அரசு பரிந்துரை செய்யும். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு அனுமதி வழங்கும்.
குரு நானக் தேவ் பிறந்த இடமான நன்கானா சாகிப்பில் உள்ள குருத்வாரா, குரு நானக் தனது கடைசிக் காலத்தை கழித்த கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்வாரா உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு அட்டாரி – வாகா எல்லை வழியாக இவர்கள் பயணம் செய்யலாம்.
இந்தக் குழுக்களுக்கு ஷிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி, பாகிஸ்தானின் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் ஆகியவை உதவிகளை செய்யும். மத வழிபாட்டுத் தல பயணங்களுக்கான 1974-ம் ஆண்டு இருதரப்பு உடன்பாட்டின் கீழ் இந்த யாத்திரை நடத்தப்படும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.