2026 டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்று விட்டன. ஹராரேயில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டிக்கான 2வது அரையிறுதியில் கென்யாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது.
ஆப்பிரிக்கச் சுற்றில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே நேரடியாகத் தகுதி பெற்று விட்டதால் இப்போது ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும் டி20 உலகக் கோப்பைப் பந்தயத்தில் இணைந்துள்ளன.
இதே ஹராரேயில் தான்சானியா அணியை எளிதில் வீழ்த்தி நமீபியா அணி முன்னதாக 2026 ஆடவர் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 2வது அரையிறுதியில் ஜிம்பாப்வே பவுலர்கள் சிறப்பாகச் செயல்பட்டு கென்யாவை 20 ஓவரக்ளில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்று நெருக்கினர். 123 ரன்கள் இலக்கை 15 ஓவர்களில் ஜிம்பாப்வே வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் பிரையன் பென்னெட் மற்றும் ததிவனாஷே மருமானி இருவரும் சேர்ந்து 6 ஓவர்களில் 70 ரன்களை விளாசித் தள்ளினர். 3வது முறையாக பவர் ப்ளேயில் ஜிம்பாப்வே அதிக ரன்களை எடுத்துள்ளது. பென்னெட் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து விரஜ் படேலிடம் அவுட் ஆனார். பென்னெட் மொத்தம் 8 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் அடித்தார்.
இதில் பென்னெட் அற்புதமாக ஆடிய ஓவர் கென்ய பவுலர் லூகாஸ் ஆலவுச் வீசிய ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசியது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் பென்னெட் 299 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார். சராசரி 74.75, ஸ்ட்ரைக் ரேட் பயங்கரமான 184.56 ஆகும். மருமானி 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து விரஜ் படேலிடம் வெளியேறினார்.
கேப்டன் சிகந்தர் ரசா 18 பந்துகளில் 10 ரன்கள் என்று அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ரியான் பர்ல் மற்றும் டோனி முனியங்கா ஆகியோர் இலக்கை எட்ட உதவினர். அன்று போட்ஸ்வானாவுக்கு எதிராக 54 பந்துகளில் 123 ரன்களை விளாசிய பிரெண்டன் டெய்லர் இறங்க வேண்டிய தேவையில்லாமல் போனது.
நமீபியாவைப் பொறுத்தவரை 4வது முறையாக டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றனர். 2021, 2022 மற்றும் 2024 உலக கோப்பைகளில் நமீபியா ஆடிய பிறகு இப்போது 2026-ல் ஆடவுள்ளது. தான்சானியாவுக்கு எதிராக 174 ரன்களை நமீபியா எடுக்க தான்சானியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்று படுதோல்வி கண்டது.