புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.
2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரபூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.
தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். முத்தாகி அக்டோபர் 10-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விவசாயப் பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியாவிலிருந்து உதவிகள் வழங்கப்படுவது குறித்து ஆமிர் கான் முத்தாகியின் வருகையின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விலக்கு பெற வேண்டும்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் குழு, முத்தாகியின் இந்திய பயணத்துக்கு “தற்காலிக விலக்கு” அளித்தது. அதன்பின்னர், முத்தாகியின் இந்திய வருகை திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் முத்தாகி பல இந்திய அதிகாரிகளை சந்தித்து வந்தாலும், ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சிக்கு இந்தியா சட்டப்பூர்வமாக இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. ஜனவரி மாதம், துபாயில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை முத்தாகி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஈரானிய சாபஹார் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.