திருவள்ளூர்: எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்து, உயிரிழந்த 9 தொழிலாளர்களின் உடல்கள் அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், ரூ. 9,800 கோடி மதிப்பில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமான பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ‘பெல்’ நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் இந்த கட்டுமான பணியில், பல்வேறு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை சேமித்து வைக்கும் கிடங்கு அமைக்கும் பணி, தற்போது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, சேமிப்புகிடங்கின் மேற்கூரை அமைக்கும் பணியில், அசாம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாரதவிதமாக இரும்பாலான மேற்கூரை சரிந்து விழுந்தது.
இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமன்கரிகாப், பிரயான்டோ, பாபன்சோரங், முன்னா கெம்பிரய், சோர்பூஜீத் தவ்சேன், தீபக் ராஜீஜுங்க், திம்ராஜ் தவ்சேன், பரியங்டோ சோரங், பாய்பிஜித் ஃபாங்களோ ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மங்கள் கல்யாண்டியோ சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 9 தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், விபத்து நடந்த பகுதியில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக காட்டூர் போலீஸார், தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் ரித்தீஷ் சர்மா குப்தா, திட்ட மேலாளர் அனுப்குப்தா, மேற்பார்வையாளர் சுமீத், பாதுகாப்பு பொறியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.