சென்னை: காந்தியைக் கொன்ற மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் பிரதமரே அஞ்சல் தலை வெளியிடும் அவல நிலை இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறி யிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நம் தேசப்பிதா காந்தியை கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவரே அஞ்சல்தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்கவேண்டும் என காந்தியின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதியேற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சுதந்திரம் அடைந்து 50 ஆண்டு களுக்கும் மேலாக சுதந்திரக் கொடியை ஏற்றுக்கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சல்தலையும், ரூ.100 நினைவு நாணயத்தையும் வெளியிட்டிருப்பது, சுதந்திர இந்தியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் துரோகச் செயலாகும்.
இழிவுபடுத்துவதற்கு சமம்
காந்தியின் படுகொலைக்குக் காரணமான சிந்தனையை வளர்த்த அமைப்பை தேசிய அங்கீகாரத்துக்கு உயர்த்துவதும், அரசின் அதிகாரப்பூர்வ சின்னங்களால் போற்றுவதும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தத்தையும், தியாகத்தையும் இழிவுபடுத்துவதற்கு சமம்.
மனிதநேய மக்கள் கட்சி
தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா: இந்தியாவின் அரசியலமைப்பையும், இறையாண் மையையும் ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெறாமல், ஆங்கிலேயரின் பிரித்தாலும் சூழ்ச்சி தந்திரத்தை வலுப்படுத்தி, இந்திய மக்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்த கடுமையாக உழைத்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கருப்பு பக்கங்கள் மறைக்கப்பட்டு போலியாகக் கட்டமைக்கப்படுகின்றன.
காந்தியைக் கொன்ற கோட்சேயை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, மத்திய அரசு நாணயம் வெளியிடுவது காந்தியை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.