திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மாலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து அன்றிரவு பெரிய சேஷ வாகன சேவையுடன் தொடர்ந்து 9 நாட்கள் வரை வாகன சேவைகள் நடத்தப்பட்டன. மொத்தம் 16 வாகனங்கள், ஒரு தங்க ரத ஊர்வலம் மற்றொன்று மகா ரத புறப்பாடு, ஒரு தீர்த்தவாரி என கடந்த 9 நாட்களும் திருமலையே விழாக்கோலம் பூண்டிருந்தது. 28 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. காலையும், இரவும் மின்னொளியில் வாகன சேவைகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் இரவு கருட வாகன சேவையில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
இந்நிலையில், நிறைவு நாளான நேற்று காலை கோயிலில் இருந்து தேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாரை ஊர்வலமாக தெப்பக்குளத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரி நிகழ்ச்சி குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா…கோவிந்தா எனும் பக்தி கோஷத்துடன் தெப்பக்குளத்தில் மூன்று முறை மூழ்கி புனித நீராடினர்.
இதனை தொடர்ந்து, நேற்று மாலை தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.