பெங்களூரு: கிபி 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மன்னர், போரில் வென்றதை முன்னிட்டு விஜயதசமி காலக்கட்டத்தில் தசரா விழாவை 10 நாட்கள் கொண்டாட தொடங்கினார். கடந்த 1947-ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் அரசு விழாவாக தசரா கொண்டாடப்படுகிறது.
415-வது ஆண்டாக தசரா விழாவை புக்கர் பரிசு வென்ற கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக் கடந்த 22-ம் தேதி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோயில், கிருஷ்ணராஜசாகர் அணை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
கடந்த 9 நாட்களும் உணவு திருவிழா, திரைப்பட திருவிழா, கிராமிய விழா, மலர்க் கண்காட்சி, பொருட்காட்சி, இசைக் கச்சேரி, இலக்கிய விழா மற்றும் கன்னட கலை பண்பாட்டை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று விஜய தசமியை முன்னிட்டு நண்பகல் 12.15 மணிக்கு மைசூரு அரண்மனையில் உள்ள நந்திகொடிக்கு முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் பூஜை செய்தனர். மைசூரு அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நவராத்திரி பூஜை செய்து, மன்னரும் பாஜக எம்பியுமான யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா மாலை 4.40 மணிக்கு ‘ஜம்போ சவாரி’ என அழைக்கப்படும் யானைகளின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 56 வயதான அபிமன்யூ யானை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் சிலையை சுமந்து ராஜ வீதியில் ஊர்வலமாக சென்றது.
இதை பின்தொடர்ந்து ரூபா, காவேரி, ஸ்ரீகண்டா, தனஞ்செயா, மஹேந்திரா, கஜன், பீமா, ஏகலைவா, லட்சுமி உள்ளிட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக சென்றன. ராஜவீதியில் தொடங்கிய ஜம்பு சவாரி, பன்னி மண்டபத்தில் நிறைவடைந்தது. கடந்த 10 நாட்களும் கோலாகலமாக நடைபெற்ற மைசூரு தசரா திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.