பார்சிலோனா: என் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது.
இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தைம் தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும் மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன்.
சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. சர்வதேச பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்ப்பதே இதன் நோக்கம். உதாரணமாக, கொரிய படங்கள் இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன. அதேபோல், இந்திய படங்களுக்கும் அதே மாதிரியான வரவேற்பு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவை பிரபலமாக உள்ளன என்பது எனக்குத் தெரியும். எனினும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் போஜ்புரி போன்ற மற்ற எல்லா மொழி படங்களையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
என் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பந்தயத்தை பார்க்க வருவதற்கு வருவதற்கு அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள். இது துபாய், ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் மற்றும் ஜெர்மனியின் நர்பர்க்ரிங்கில் நடந்தது. அடுத்த தொடரிலிருந்து, காரில் ‘இந்திய சினிமா’ என்று எழுதப்பட்ட ஒரு சிறப்பு லோகோவுடன் இந்திய சினிமாவை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளுடன் உலகிலேயே மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பாளர்களாக நாம் இருக்கிறோம். பொழுதுபோக்கும் விளையாட்டும் எப்போதும் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக இருந்து வருகின்றன. அவை ஒன்றோடொன்று இணைந்தே இருக்கின்றன. கோவிட்-19 காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். மக்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது பொழுதுபோக்கும் விளையாட்டும்தான். எனவே, திரைப்படத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். திரைப்படத் துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றிய நான், இதையெல்லாம் செய்ய முடிந்ததற்கு காரணம் அன்பும் நல்லெண்ணமும்தான்” இவ்வாறு அஜித் தெரிவித்தார்.