மம்மூட்டி – மோகன்லால் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘பேட்ரியாட்’ (Patriot) எனப் பெயரிடப்பட்டு டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார்கள். இப்படம் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மம்மூட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி திரும்பியிருப்பதால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு ‘பேட்ரியாட்’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், இதன் சிறிய டீஸர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். இதில் ஃபகத் பாசில், குஞ்சாகோ போபன், நயன்தாரா, ரேவதி உள்ளிட்ட பலர் மம்மூட்டி – மோகன்லால் உடன் இணைந்து நடித்துள்ளார்கள். முழுக்க ஆக்ஷன் படமாக இது அமைந்திருப்பது டீஸர் மூலம் தெரியவருகிறது.
இப்படத்தினை ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக மனுஷ் நந்தன், இசையமைப்பாளராக சுஷின் ஸ்யாம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் வெளியீடு எப்போது என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.