சென்னை: கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி இந்தியா வருவதை உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்திய சிறப்பு மிக்க நாடு. 14 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வந்த போது நான் கண்ட அனுபவம் என் நினைவுகளில் உள்ளது. இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். கால்பந்து விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட நாடு இந்தியா. இந்த முறை எனது ஆட்டத்தை நேசிக்கும் அடுத்த தலைமுறை ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். இந்த பயணம் எனக்கு மதிப்பளிக்கிறது” என மெஸ்ஸி தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் (நவம்பர்) கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் தனது இந்திய பயணத்தை மெஸ்ஸி உறுதி செய்துள்ளார்.
இந்த போட்டி மட்டுமல்லாது டிசம்பர் மாதம் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 4 இந்திய நகரங்களில் பிரத்யேகமாக நடைபெறும் நிகழ்வுகளில் மெஸ்ஸி பங்கேற்க உள்ளதாகவும் தகவல். இதில் கொல்கத்தாவில் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை திறந்து வைக்கிறார். இதோடு முக்கிய பிரபலங்களை சந்திக்க உள்ளார்.