பான் இந்தியா என்ற வார்த்தையை கேட்டாலே மிக முக்கியமாக ஞாபகம் வரும் படங்கள் மூன்று. ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’. இவற்றில் முந்தைய இரண்டு படங்களும் உருவாக்கத்தின் போதே நடிகர்கள், பிரம்மாண்ட பட்ஜெட் என அனைத்தும் இந்திய அளவில் பரவலான கவனத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே எடுக்கப்பட்டவை. ஆனால் ‘காந்தாரா’ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் அல்ல. அது முழுக்க மண் சார்ந்த, வட்டார மொழியுடன் கூடிய ‘ஆர்கானிக்’ ஆக எழுதப்பட்ட ஒரு படம். இத்தனைக்கு அப்படம் வெளியான போது தமிழில் கூட டப் செய்யப்படவில்லை. ஆனால், அப்படத்தின் திரைக்கதையும், அட்டகாசமான மேக்கிங்கும் அப்படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்து ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலிக்கச் செய்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘காந்தாரா’வின் முன்கதையாக வெளியாகியுள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
முதல் பாகத்தின் இறுதியில் நாயகன் மறையும் இடத்திலிருந்து தொடங்கும் கதை, அதற்கு காரணத்தை ஒரு புராணக் கதையின் வழியே சொல்கிறது. காந்தாரா மலைக் காடுகளின் மத்தியில் இருக்கும் ஈஸ்வர பூந்தோட்டம் என்னும் இடத்தை அடையத் துடிக்கும் கொடுங்கோல் மன்னனை அங்கிருக்கும் தெய்வீக சக்தி அழிக்கிறது. இதில் மன்னனின் மகன் விஜயேந்திரன் (ஜெயராம்) மட்டும் தப்பிவிடுகிறார்.
பல ஆண்டுகள் கழித்து மன்னாக இருக்கும் விஜயேந்திரன் தனக்குப் பிறகு தனது மகன் குலசேகரனுக்கு (குல்ஷன் தேவய்யா) முடி சூடுகிறார். மீண்டும் காந்தாரா காட்டுக்குள் நுழையும் குலசேகரனால், காட்டைக் காக்கும் பழங்குடி மக்களுக்கும், குலசேகரன் படைகளுக்கு மோதல் ஏற்படுகிறது. காந்தாரா மக்களின் தலைவனாக இருக்கும் நாயகன் (ரிஷப் ஷெட்டி) எடுக்கும் முடிவுகள் என்ன? குலசேகரனின் தங்கை கனகவதிக்கும் நாயகனுக்குமான உறவு என்ன? இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் கதை.
திரைக்கதையாக நேர்த்தியாக இருக்கும் சில படங்கள் தொழில்நுட்ப ரீதியாக சொதப்பிவிடும். தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டமாக அமைந்த பல படங்கள் திரைக்கதையில் திக்குமுக்காடியதை சமீபகாலங்களிலேயே பார்த்திருக்கிறோம். ஆனால் திரைக்கதையிலும், தொழில்நுட்பரீதியாகவும் மிக நேர்த்தியாக வந்திருக்கும் ஒரு படமாக இதனை தாராளமாக சொல்லலாம். தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் துல்லியமும், உழைப்பும் அப்பட்டமாக தெரிகின்றன. அந்த வகையில் சந்தேகமே இல்லாமல் இந்த படம் ஒரு ‘டெக்னிக்கல் மாஸ்டர்பீஸ்’.
தொழில்நுட்ப ரீதியில் சமீப ஆண்டுகளில் வெளியான மிகச் சிறந்த படம் என்று இதனை சொல்ல முடியும். தொழில்நுட்பம் குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுச் சொல்வதன் காரணத்தை பெரிய திரையில் காணும்போது நிச்சயம் அனுபவிக்கலாம். அந்த அளவுக்கு போட்டி போட்டு உழைத்துள்ளது படக்குழு.
ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல்பெர்க் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களின் தரத்துக்கு நிகராக இருக்கிறது காடும் காடு சார்ந்த காட்சிகளின் மேக்கிங்கும். இதன் முழு கிரெடிட்ஸும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப்பையே சேரும். அந்த அளவுக்கு ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு விஷுவல் ட்ரீட். குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும், தேர் ஒன்று ஓடி வரும் காட்சியிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.
முதல் பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி ‘காந்தாரா’வின் உலகத்துக்குள் மெல்ல மெல்ல நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்பட்டுவிடாதவாறு கவனத்துடன் எழுதியுள்ளார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.
படத்தின் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய மற்றொரு அம்சம், அதன் கிராபிக்ஸ். குறிப்பாக இதற்கு முன்பு வந்த பெரிய பட்ஜெட் படங்களில் கூட விலங்குகள் தொடர்பான கிராபிக்ஸ் பிளாஸ்டிக் தன்மையோடு இருந்த நிலையில், இதில் கிராபிக்ஸ் படுதுல்லியம்.
சந்தேகமே இன்றி இப்படத்தின் ஆன்மா ‘நடிகர்’ ரிஷப் ஷெட்டி என்று சொல்லலாம். முந்தைய பாகத்தை காட்டிலும் அசாத்திய உழைப்பை கொட்டியிருக்கிறார். படத்தின் கடைசி 30 நிமிடங்களில் இயக்குநராகவும் நடிகராகவும் அதகளப்படுத்தியிருக்கிறார். ருக்மிணி வசந்துக்கு கனமான கதாபாத்திரம். அதற்கு தனது சிறப்பான நடிப்பால் நியாயம் செய்கிறார். அரசனாக வரும் குல்ஷன் தேவய்யா வரும் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு எல்லாம் எரிச்சல் ஊட்டும் அளவுக்கு நல்ல நடிப்பைத் தந்துள்ளார்.
இடைவேளைக் காட்சி, யுத்தம், ஆக்ஷன் காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது. குறிப்பாக, கடைசி 30 நிமிடம் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அடுத்த பாகத்துக்கான குறியீடு வைத்த விதமும் சிறப்பு. முதல் பாகத்தைப் போலவே அஜனீஷ் லோகநாத்தின் பின்னணி இசை படத்துக்கு பலம். பாடல்கள் ஓகே ரகம்.
காமெடி காட்சிகள் சில இடங்களில் கைகொடுத்தாலும் பல இடங்களில் எடுபடவில்லை. அதில், இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சில இடங்களில் காட்சிகள் சற்றே இழுவையாக தோன்றுவதை தவிர்த்திருக்கலாம். குல்ஷன் தேவய்யா நல்ல நடிப்பை தந்திருந்தாலும், அவரது கதாபாத்திரம் இன்னும் முழுமையாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் கிளைமாக்ஸை நோக்கி கதையை நகர்த்தும் பொருட்டு அவசரகதியில் எழுதப்பட்டிருந்ததையும் மறுக்க முடியாது.
மேலே சொன்ன சில குறைகள் எல்லாம் திரைக்கதையின் ஓட்டத்திலும், தரமான தொழில்நுட்ப பிரம்மாண்டத்திலும் பெரிய அளவில் உருத்தவில்லை. கூஸ்பம்ப் காட்சிகளும், சிலர்க்க வைக்கும் திரை அனுபவமும் வேண்டுவோரை நிச்சயம் திருப்திப்படுத்தும் இந்த ‘காந்தாரா: சாப்டர் 1’.