விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சோயா பீன்ஸ் விவகாரம் குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் “சீனா பேச்சுவார்த்தை காரணங்களுக்காக மட்டுமே நம்மிடமிருந்து சோயாபீன்ஸ் வாங்காமல் இருப்பதால், நம் நாட்டின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வரிகளின் மூலம் நாம் நிறைய பணம் சம்பாதித்துள்ளோம். அந்தப் பணத்தில் ஒரு சிறிய பகுதியை கொண்டு நம் விவசாயிகளுக்கு உதவப் போகிறோம். நான் ஒருபோதும் நம் விவசாயிகளை கைவிட மாட்டேன்.
தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் சீனாவுடனான நம் ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை. அவர்கள் நமது பண்ணை உற்பத்தியில் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க இருந்தனர், குறிப்பாக சோயாபீன்ஸ். அனைத்தும் நன்றாக நடக்கும். நான் நமது தேசபக்தர்களை நேசிக்கிறேன். ஒவ்வொரு விவசாயியும் அப்படித்தான். நான் நான்கு வாரங்களில் சீன அதிபரை சந்திக்க உள்ளேன். சோயாபீன்ஸ் அதில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும். சோயாபீன்ஸ் மற்றும் பிற பயிர்களை மீண்டும் சிறப்பாக மாற்றுவோம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக சீன பொருட்களுக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தி ட்ரம்ப் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. இதில் முக்கியமானதாக, அமெரிக்க விவசாய ஏற்றுமதியின் மையப் பொருளான சோயாபீன்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பண்ணை பொருட்களின் கொள்முதலை சீனா குறைத்தது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சீனா அமெரிக்க சோயாபீன்களை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அமெரிக்க விவசாயிகள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.