தனக்கு ஒதுக்கப்பட்ட வடக்கு மண்டலத்தில் தனது கட்டுப்பாட்டில் வரும் 41 தொகுதிகளிலும் திமுக-வை ஜெயிக்க வைக்க வேண்டும் என மெனக்கிட்டு வருகிறார் அமைச்சர் எ.வ.வேலு. ஆனால், வேலுவை வெல்பவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது கட்சியினருக்கு அதிரடி ஆஃபர் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அண்மையில் சேலத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் எப்படி இருந்த திமுக-வை இப்போது எப்படி வைத்திருக்கிறீர்கள்? என்னுடைய தொகுதியில் வந்து பாருங்கள். அங்கே என்னை மீறி யாராவது ஜெயித்துவிட முடியுமா? அந்தளவுக்கு பக்காவாக வைத்திருக்கிறேன் எனது திருவண்னாமலை தொகுதியை” என்று தம்பட்டம் அடித்தார்.
வேலுவின் இந்த சுயசரிதைப் பேச்சை திமுக-வினர் சீரியஸாக கேட்டார்களோ இல்லையோ… ஆனால் அதிமுக-வினர், வேலுவின் பேச்சைக் குறிப்பெடுத்து அதை அப்படியே கொண்டு போய் பழனிசாமியின் காதில் போட்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு சுளீர் ஆன பழனிசாமி, “ஜெயிக்கவே முடியாத அளவுக்கு அவரென்ன கருணாநிதியா..?” என்று கேட்டதுடன், “தன்னை யாராலும் ஜெயிக்க முடியாதுன்னு வேலு சொல்றாருல்ல… அவரை ஜெயிக்கிற மாதிரியான பலமான வேட்பாளரை நம்ம இந்த முறை நிறுத்துறோம். வேலுவை ஜெயிக்கிறவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறோம்” என்று சொன்னதாக சேலம் அதிமுக வட்டாரத்திலிருந்தே ஒரு தகவல் கசிகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட அதிமுக-வினர், “திமுக தலைமைக்கு மிக நெருக்கமா இருக்கிற எ.வ.வேலு கட்சிக்கு கஜானாவாகவும் இருக்கிறார். அதனால் அவரை வீழ்த்த வேண்டியது அதிமுக-வுக்கு மிக முக்கியமான பணி. திருவண்ணாமலை தொகுதியை தங்கத்தால் இழைத்து வைத்திருப்பது போல் தம்பட்டம் அடிக்கிறார் வேலு. ஆனால், அங்கேயும் பாதாளச் சாக்கடை திட்ட செயல்பாடு தொடங்கி, அண்ணாமலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பிரச்சினை வரை அவருக்கு எதிராக தேர்தலில் எதிரொலிக்க தயாராய் இருக்கிறது.
வேலுவை எதிர்த்து இப்போதைக்கு முன்னாள் அமைச்சர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி அல்லது எஸ்.ராமச்சந்திரனை நிறுத்தும் யோசனையில் இருக்கிறது தலைமை. இவர்களில் யாரை நிறுத்தினாலுமே போட்டி கடுமையாகத்தான் இருக்கும். ஏனென்றால், 2011-ல் எ.வ.வேலுவை எதிர்த்து நின்ற எஸ்.ராமச்சந்திரன் சுமார் 5 ஆயிரம் வாக்குகளில் தான் தோற்றார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி நின்றால் அவரின் அதிரடிகளுக்குப் பயந்தே கட்சிக்காரர்கள் வேலை செய்வார்கள்” என்றனர்.
இதுகுறித்து பேசிய திருவண்ணாமலை திமுக-வினரோ, “திருவண்ணாமலை என்றைக்குமே திமுக-வின் கோட்டைதான். இதை அமைச்சர் எ.வ.வேலு திமுக-வின் எஃகு கோட்டையாகவே மாற்றி வைத்திருக்கிறார். இந்தத் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்திருப்பதால் தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கே அவர் வென்றிருக்கிறார். அவரது மக்கள் செல்வாக்கிற்கு மத்தியில் எதிர்த்து நிற்க முடியாது என்று தெரிந்துதான் அதிமுக தரப்பில் அனைவரும் தலை தெறிக்க ஓடுகிறார்கள். அவர்களை இழுத்து நிறுத்தத்தான் எடப்பாடி பழனிசாமி ஆஃபர் அறிவித்திருக்கிறார் போலிருக்கிறது” என்கிறார்கள்.
வேலுவை வீழ்த்துகிறவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என பழனிசாமி அறிவித்தாலும் வேலுவை விட அதிமுக உட்கட்சிப் பூசல்களுக்குப் பயந்தே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவரும் தேர்தலில் போடியிடும் ஆர்வமே இல்லாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து விளக்கமறிய திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரனை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்காததால் திருவண்ணாமலை நகர அதிமுக செயலாளர் ஜெ.எஸ்.செல்வத்திடம் பேசினோம். “சார், இங்கு யாரை நிறுத்த வேண்டும் என்று எங்கள் பொதுச்செயலாளர் முடிவு செய்வார். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் அவர்.
திருவண்ணாமலையில் நான்காவது முறையாகவும் எ.வ.வேலுவுக்கு வெற்றிக்கனி கைக்கு எட்டுமா… அல்லது பழனிசாமியின் அமைச்சர் ஆஃபருக்கு ஆள் சிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.