துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.
25 வயதான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஏழு இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் மலான், ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிகபட்சமாக 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்தது. இதை கடந்த 2020-ம் ஆண்டு மலான் எட்டியிருந்தார். இந்த சூழலில் தற்போது அதை தகர்த்துள்ளார் அபிஷேக். அவர் 926 புள்ளிகளுடன் ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இப்போது முதலிடத்தில் உள்ளார். இதே பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளார் மற்றொரு இந்திய வீரரான திலக் வர்மா.